#ElectionResults2019 பத்துவருடத்திற்குப் பின் திமுக அதிரடி வெற்றி! திமுகவா கொக்கா!! குஷியில் "தலைவர்" ஸ்டாலின்!!!
  • 13:20PM May 23,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 13:20PM May 23,2019 Chennai

நாடாளுமன்ற தேர்தல் முடிவில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தாலும், தமிழகத்தை அவர்களால் தொடக்கூட முடியவில்லை! இந்தத் தேர்தலின் ஆரம்பத்தில் இருந்தே மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தாலும் மாநில கட்சிகளின் பங்கு அதிகமாக இருக்கும் என்று கருதப்பட்டது. அதற்கேற்றாற் போல இந்தத் தேர்தலின் முடிவில் மாநில கட்சிகள் சில பெரும்பான்மையான இடங்களைப் பிடித்துள்ளது. இதில் திமுகக் கூட்டணியின் வெற்றி முக்கியமானதாகும். இந்தக் கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது.

கலைஞர், அம்மா போன்ற போன்ற ஆளுமை இல்லாமல் இந்தத் தேர்தலை தமிழகக் கட்சிகள் எதிர்கொண்டன. இதில் ஸ்டாலின் தலைமையில் தேர்தலை சந்தித்த திமுகக் கூட்டணி 35 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. இந்த வெற்றியை பெரும் இன்பத்துடன் திமுகத் தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் கொண்டாடிவருகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டுத் தான் திமுகக் கட்சி கடைசியாகத் தமிழகத்தில் ஆட்சி புரிந்தது. அதன்பின் 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெறும் 18 தொகுதிகளை வென்றது. எதிர்பார்த்த வெற்றி இல்லாவிட்டாலும், அந்தத் தேர்தலில் தான் கடைசியாகத் திமுக அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றியது.

அதன் பின்பு 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெறும் 23 தொகுதிகளைக் கைப்பற்றி எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது. இதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளுமை மிக்கக் கலைஞர் இருந்தும், திமுக ஒரு தொகுதியையும் கைப்பற்றவில்லை. நாடாளுமன்ற தேர்தல் தானே என்று விட்டாலும், 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 89 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்காமல் எதிர்க்கட்சியாக அமர்ந்தது.

கடந்த 10 வருடங்களில் எந்த வெற்றியும் இன்றித் திமுகக் கட்சியே சோகத்தில் முழுகி இருந்தது. இதனிடையே கலைஞர் என்ற மிகப்பெரிய தூண் இறந்ததால், கட்சி தொண்டர்கள் சோர்வுற்று இருந்தனர். கலைஞர் இன்றித் திமுக எதிர்கொண்ட முதல் தேர்தல் இதுவாகும், கலைஞரின் வெற்றிடத்தை நிறைவு செய்து, கட்சியை வெற்றி பாதையில் கொண்டு செல்வாரா என்று தலைவர் ஸ்டாலின் மீது ஏகப்பட்ட கேள்விகள் வைக்கப்பட்டன. அவை அனைத்துக்கும் பதில் அளிக்கும் விதமாக இந்த நாடாளுமன்ற தேர்தலின் வெற்றியை தலைவர் ஸ்டாலின் அவரது தொண்டர்களுக்குப் பரிசாக அளித்துள்ளார். பத்துவருடம் கழித்துப் பெற்ற வெற்றியாக இருந்தாலும், பலமான வெற்றியாகும்!

Top