2015 மழைக்கும், 2017 மழைக்கும் என்ன வித்தியாசம்???
  • 09:18AM Nov 07,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 09:18AM Nov 07,2017 Chennai, Tamil Nadu 600003, India

ஊடகங்கள் அரசை நோக்கிக் கேள்விகளாகத் துளைக்க, அரசோ நாங்க நிறைய செஞ்சோம் – பணிகளை முழுமையாக முடிக்க முடியாத காரணத்தால்தான் மழை நீர் தேங்குகிறது என்றும், தண்ணீர் தேங்கவே இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாகப் பேசிக் கொண்டிருக்கிறது.  இதில் யார் சொல்வது நிஜம் என்பதை நீங்களாகவே முடிவு செய்யத்தான் இந்தப் பதிவு.  ஒரு சிறு நினைவூட்டல் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.  கார் வைத்திருப்பவர்களை விட பைக் வைத்திருப்பவர்களுக்குத்தான் முழுவதுமாக ஞாபகம் இருக்கும்.

2015 :

மழை முதலில் நான்கு நாட்கள் இடைவிடாது பெய்தது.  தண்ணீர் தேங்கத் தேங்க வெளியேறிக் கொண்டிருந்தது. நடுவில் இரண்டு மூன்று நாட்கள் சுத்தமாக மழை இல்லை.  வெயிலும் இல்லை.  சுத்தமாக எந்த பாதிப்பும் இல்லாமல் மக்கள் சென்று வந்து கொண்டிருந்தனர்.  மீண்டும் நான்கைந்து நாட்கள் மழை பெய்யத் துவங்க, அப்பொழுதுதான் நீர்மட்டம் முதலில் உயர்ந்து தேங்கத் துவங்கியது.  ஆனால், அதுவும் கூட சில மணி நேரங்களிலேயே முழுவதுமாக வெளியேறியது.  தாழ்வான பகுதிகளில் இருக்கும் சில இடங்களில் மட்டும் நீர் தேங்கியது.  இடையில் ஒரு நாள் சுள்ளென்று வெயில் தாக்க, அன்றிரவு மீண்டும் ஆரம்பித்த மழை இரண்டு நாட்கள் விடாமல் பெய்தது.  அப்பொழுதுதான் முதல் முதலாக முழங்காலுக்கு மேல் தண்ணீர் ஏறியது. 

அப்பொழுதும் கூட வடசென்னை பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்த இடங்களுக்குப் பெரிதாக எந்த சேதமும் இல்லை.  வழக்கமாகத் தண்ணீர் தேங்கும் சில இடங்களைத் தவிர, வேறு இடங்களில் பெரிய பாதிப்புகள் இல்லை.  மைலாப்பூர், மந்தைவெளி, சைதாப்பேட்டை போன்ற இடங்கள் கழுவி விட்டது போல இருந்ததே ஒழிய, பெரிய பாதிப்பில்லை.  வேளச்சேரி பகுதிகள் அப்பொழுதே முழுதும் மூழ்கி விட்டது.  புறநகர்ப் பகுதிகளில் நிலைமை வெகு மோசம். அதுவும் கூட ஒரே நாளில் வற்றியது.  பிறகு ஒரு பத்து இருபது தினங்கள் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லாமல் சாதாரணமாக இருக்க, மக்கள் இயல்பாகத் தங்கள் பணிகளுக்குத் திரும்பிவிட்டனர். மழை பெய்து கொண்டிருந்தாலும் பெரிய பாதிப்பில்லாமல் பெய்து கொண்டிருந்தது.  ஏரிகள் கொள்ளளவு குறித்து உண்மையில் மக்கள் மகிழ்ச்சிதான் கொண்டிருந்தனர்.  கடலூர் போன்ற மாவட்ட வெள்ளத்திற்கு இளைஞர்கள் உணவு திரட்ட ஆரம்பித்திருந்தனர். 

அடுத்துப் பெய்த மழைதான் சரியான மழை.  ஒரே இரவில் முழங்கால் தாண்டி தண்ணீர் ஏறி நிற்க, நிலத்தின் உறிஞ்சு தண்மை, வடிகால் போன்ற காரணங்களாலும், மழை நீர் குறையக் குறைய பெய்து கொண்டிருந்ததாலும் ஒரு வாரத்திற்கும் மேலாக நீர் தேங்கிவிட, சென்னை வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்று விட, படகு மூலம் மீட்புப் பணியும், தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசியத் தேவைகளும் நிறைவேற்றப்பட்டன… வீடுகளை இழந்தவர்களுக்கு இளைஞர்கள் தங்கள் இல்லங்களைப் பகிர்ந்தளித்தனர். அதற்குப் பிறகு ஓரிரு நாட்களில் செம்பரம்பாக்கம் ஏரி உடையும் நிலையில் இருப்பதாகச் சொல்லி, வெறும் ஒரு மணி நேர அவகாசத்தில் திறந்து விடப்பட்டது.  சைதாப்பேட்டை பாலத்தைத் தாண்டி ஓடிய தண்ணீர் நிறைந்து வழிந்து மெட்ரோ சுரங்கம் வழியாக மைலாப்பூரில் வெளியே வரத் துவங்க, மழையுடன் சேர்ந்து வேளச்சேரியில் ஒரு வளர்ந்த மனிதனின் கழுத்தளவு தண்ணீர் ஓடியது.  கிட்டத்தட்ட பத்து இருபது நாட்கள் கழித்தே நிலைமை சீரானது. இதுதான் 2015 ல் நடந்தது.

       US, UK போன்ற நாடுகளை விடச் சிறப்பான பணிகளைச் செய்து பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று அரசு சொன்னாலும், 2017ல் நடந்தது என்ன???

2017 :

முதல் நாள் சாதாரண மழை. அடுத்த நாள் விடாமல் 8 மணி நேரம் மழை பெய்தது.  தண்ணீர் முதலில் வட சென்னை, வியாசர் பாடி, மைலாப்பூர், தாம்பரம், எனப் போன முறை கடைசியாக வெள்ளம் புகுந்த பகுதிகளில் முதலில் தேங்கியது. வேளச்சேரி, பள்ளிக்கரணை மேடவாக்கம் போன்ற பகுதிகளில் சொல்லவே வேண்டாம். இன்னமும் நிறையப் பகுதிகளில் நீர் வடியவில்லை.  4 நாட்கள் 2015ல் பெய்தும் நிறையாத சென்னை 8 மணி நேரத்தில் நிறைந்து வழிந்தது.

காரணம்:

ஏற்கெனவே சொன்னது போல, 2015, பிறகு வர்தா இரண்டின் நிவாரண நிதி பெரும்பாலும் சாலைகளை சரி செய்யவே சரியாகப் போனது.  அப்படியும் அவசர கதியில் போடப்பட்ட சாலைகள் கழிவு நீர், வடிகால் இரண்டையும் மூடி மேலே தார் போட்டு மூடப்பட்டது.  வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் மட்டும் அந்த மூடிகளைச் சுற்றியுள்ள தாரை அகற்றி வைத்திருக்கிறார்கள்.  பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.  

இரண்டாவது, முன்னேற்பாடு என்று எதைச் சொன்னார்கள் என்பதை அவர்கள் மழை தேங்கிய உடனே அறிவித்த ஹெல்ப்லைன் நம்பர்களைப் பார்த்தாலே புரியும்.  மரம் வெட்டும் இயந்திரங்கள், படகுகளை ஏற்பாடு செய்தல், அதிகத் திறனுள்ள மோட்டார்கள் என்ற ரீதியிலேதான் செலவுகள் இருந்திருக்கக் கூடும்.  மழை பெய்ய ஆரம்பித்த இரண்டாவது நாளில்தான் தூர்வாருதல் வேலைக்குப் பண ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.  ஏரிகள் நிரம்பாமலே ஊருக்குள் தண்ணீர் வருகிறதென்றால், வடிகால் சரிவர இல்லாமல் தடைப்பட்டிருக்கிறது என்று தெரிந்திருக்க வேண்டும்… அதாவது ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் ஊருக்குள் வழிந்தது…

மூன்றாவது, ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என்று தமிழக அரசே உயர்நீதிமன்றத்தில் சொல்லியிருப்பது.

நான்காவது, வடிகால் அமைக்கச் செய்த பணிகள்.  வடிகால் பணி என்பது வடியும் இடத்திலிருந்து துவங்கி உள்நோக்கிச் சென்றிருக்கும் பட்சத்தில், ஏரி மற்றும் கால்வாய் கரையோரம் இருக்கும் நிறையப் பகுதிகளில் இந்த மழைக்கே இப்படி வெள்ளம் வந்திருக்காது.  தண்ணீரின் அடிப்படை குணாதிசயம் மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒட்டிக் கொண்டு பிரியாதவை.  அப்படிப் பார்த்தால், மற்ற பகுதிகளிலும் உள்ள நீரை இந்த நீர் வெளியேறும் போது இயன்றவரை இழுத்துச் சென்றிருக்கும். மாறாக, ஊருக்குள்ளிருந்து பதித்து வருவதால் இந்த மழை நீருக்கு வெளியே செல்ல இருந்த கொஞ்சம் வழிகளையும் நாமே அடைத்து விட்டது போலாகி விட்டது.

அரசு கூறிய விஷயங்கள் நடந்திருக்கும் பட்சத்தில் இவைகள்தான் பிரச்சினைகளாக இருந்திருக்க வேண்டும்.  அதையும் தாண்டி வெள்ளம் ஏற்பட இதுவரை பெய்தது 2015 டன் ஒப்பிடும் பொழுது முதல் நான்கு நாட்கள் கதைதான்.  இன்னமும் முழுவதுமாக இரண்டு மாதங்கள் கடந்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். 2015 ல் கிட்டத்தட்ட 7 புயல்கள் உருவானது.  இப்பொழுது ஒன்று முடிந்து அந்தமான் தீவுகளில் ஏற்பட்டிருப்பது இரண்டாவதுதான்.  இப்பொழுது பெய்த மழையின் மூலம் எங்கெங்கே என்னென்ன வடிகால் பிரச்சினைகள் இருக்கிறதென அறிந்து கொண்டோம். இப்பொழுதாவது விழித்துக் கொண்டு செயலாற்றினால் இந்தப் பருவ மழையைப் பெரிய பாதிப்பில்லாமல் கடந்து போக முடியும்.

இந்தக் கட்டுரையை உங்களால் முடிந்த அளவு பகிருங்கள்… சம்பந்தப்பட்டவர்களிடம் எவ்வளவு விரைவாகச் சென்று சேர்கிறதோ அந்த அளவிற்கு நமக்கு நல்லது.  இந்தப் பருவ மழையில் பெரிதாக வெள்ளம் வராமல் கூட இருக்கலாம்.  இருப்பினும் முன்னேற்பாடுகள் நமக்கு நல்லது.  வெள்ளம் வந்த பின் நமது பணிகள் என்பதை விட வெள்ளத்திற்கு முன் நமது பணிகள் மிகவும் இன்றியமையாதது… செய்வீர்களா???            

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top