2000 RS NOTE: இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதா??? எதற்காகக் கிளப்பப்படுகிறது இந்தச் செய்தி???
  • 20:21PM Jan 03,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:21PM Jan 03,2019 Chennai

கடந்த சில மாதங்களாக பணப்பரிமாற்றம் செய்த அனைவருமே அதில் 2000 ரூபாய் நோட்டுக்கள் வழக்கத்தை விடக் குறைவாகக் கிடைப்பதாக எண்ணியிருந்தால், இந்தச் செய்தி உன்மை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். கவனிக்கவில்லையென்றால், இனி கவனித்துப் பாருங்கள். ஏனெனில், 2000 நோட்டுக்களை அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தியிருப்பதாக, அரசின் உயர் பதவியிலிருக்கும் ஒருவர் சொன்னதாக ThePrint என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்குக் காரணம், மத்தியில் ஆளும் மோடி அரசு முறையற்ற பணப்பரிவர்த்தனைகளிலும், வரி ஏய்ப்பதற்காகவும், பதுக்கி வைப்பதற்காகவும் 2000 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படுவதாகச் சந்தேகிக்கிறதாம். அதனால், 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை நிறுத்திவிட்டு, 500 ரூபாய் நோட்டுக்களை அதிகளவில் அச்சிடச் சொல்லியிருக்கிறதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

விஷயத்திற்கு வருகிறேன். நாணயங்கள் அச்சிடுவது வேண்டுமானால், தொடர்ச்சியான பணியான இருக்க முடியும். காரணம், தேவை அதிகம், எண்ணிக்கையும் அதிகம். ஆனால் பணமதிப்பிழப்பு சமயத்தில், நமக்கெல்லாம் எத்தனை நோட்டுக்கள், எவ்வளவு தொகை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்கள் நினைவிருக்கிறதா??? ரூபாய் நோட்டுக்களை நினைத்தபடியெல்லாம் அச்சடிக்க முடியாது. அப்படி இன்னமும் அச்சடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், எங்கேயோ பெரும் தவறு நேர்ந்திருக்கிறது என்று அர்த்தம். காரணம், தினமும் அச்சடிக்க அது பத்திரிகை அல்ல. அது மட்டுமல்லாமல் அரசின் RESERVE VALUE பொறுத்துத்தான் பணம் அச்சடிக்க முடியும். பணம் இல்லையென்று தன்னிச்சையாக RBI அல்லது மத்திய அரசு செய்யக் கூடிய வேலை இல்லை. அப்படிச் செய்தால், பணத்தின் மதிப்பு, அடிக்கப்படும் தொகைக்கேற்ப குறைந்து விடும். கிழிந்த நோட்டுக்கள், பழுதடைந்தது போன்றவற்றுக்காக அச்சடிப்பது வழக்கம் என்றால் அது மத்திய அரசும், RBI-யும் இணைந்து எடுக்க வேண்டிய முடிவு. இப்போது புரிகிறதா தவறு எங்கே என்று??? அதனால் 2000 அச்சடிப்பது நிற்கிறது, 500 அச்சடிக்க ஆரம்பிக்கிறார்கள் என்பது விளையாட்டாக நடக்கக் கூடியதில்லை.

இரண்டாவது இந்த செய்தி வெளியாகும் சமயம். ஒரு பக்கம் தேர்தல் பரபரப்பு, இன்னொரு பக்கம் நாடாளுமன்றத்தில் ரஃபேல் பிரச்சினை குறித்த ராகுல் கேள்விகள் என்ற நேரத்தில், வேண்டுமென்றே எழுப்பப்படும் மக்களின் அத்தியாவசியப் பிரச்சினை பாதிக்கப்படுவது போன்ற புரளி, எதனால் செய்யப்படுகிறது என்பது மக்களுக்கே தெளிவாகப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது மட்டுமல்ல, தேர்தல் நேரத்தில் DEMONETISATION-ஐ நியாயப்படுத்திப் பேசவும் இந்தச் செய்தி உதவலாம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. யாரும் பணத்தை நோட்டுக்களாகப் பதுக்குவதில்லை என்ற வாதத்திற்கு எதிர்வாதமாகக் கூட இதைப் பயன்படுத்த முடியும். திடீரென்று இது போன்ற செய்தி வருவதன் நோக்கம் என்ன, எதற்காக இதை செய்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!!

Share This Story

You Might Also Like These
Related Stories
Top