மெட்ரோ குடிநீர் மூலம் பரவுகிறதா டெங்கு???
  • 07:19AM Oct 04,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 07:19AM Oct 04,2017 Chennai, Tamil Nadu 600003, India

டெங்கு கொசுக்களின் தனி இயல்புகளை ஆராய்ந்து அரசு தற்போது சொல்லியிருக்கும் ஒரு மிக முக்கியமான விஷயம், டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் இனப்பெருக்கம் செய்யும் என்பது.  தேங்கும் நீர் என்று சொல்லியிருந்தால் அந்த நீரின் மேல் ஒரு படலத்தை ஏற்படுத்தக் கூடிய வண்ணம் தெளிப்பான்கள் மூலம் மருந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்… ஆனால், நல்ல தண்ணீர் என்று பார்க்கும் போதுதான், எங்கிருந்து இவை வருகிறது என்ற பெரிய கேள்வி எழுகிறது.  பொதுவாக நல்ல தண்ணீர் என்று பார்த்தால், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள்தான் நம் நினைவுக்கு வரும்… ஆனால், அங்கு டெங்கு கொசுக்களின் இனப்பெருக்கம் என்பது பெரிய அளவில் சாத்தியப்படாத ஒன்று.  காரணம், மீன்கள்… கொசுப் புழுக்கள் லார்வாக்களாக இருந்து கொசுவாகும் முன்னரே பெரும்பாலும் தின்று தீர்க்கப்படும். வேறு வழி என்னவாக இருக்கக் கூடும்.

டெங்கு பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை உற்று நோக்கினால், சற்றே அதிர்ச்சி தரும் ஒரு விஷயம் நம் கவணத்தைக் கவர்கிறது.  அது பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுமே குடிநீர் ஆதாரம் நேரடியாக இல்லாத பகுதிகள்தான்.  அதாவது, ஒன்று மேல்நிலைத் தொட்டிகளில் நீரேற்று முறையில் தண்ணீர் சேமிக்கப்பட்டு, பின் விநியோகிக்கப்படுவது, சென்னையில் மெட்ரோ வாட்டர்.  பாதிக்கப்பட்ட பகுதிகளில், பெரிய மனிதர்கள் வாழும் பகுதியோ, மத்திய சென்னை, தென் சென்னையோ பெரும்பாலும் இருக்காது.  ஆனால், வடசென்னையில், மெட்ரோ வாட்டர் மூலமாகத் தண்ணீர் பகிரப்படும் பகுதிகளில் அதிகம்.  இந்தத் தொட்டிகள் பெரும்பாலும் திறந்தேதான் இருக்கும்… மெட்ரோ வாட்டர் லாரிகள் மூலம் தொட்டியில் விடப்படும் நீர் பைப் உயரம் வரைதான் நீரைப் பிடிக்க முடியும்.  மிச்சமிருக்கும் இரண்டங்குல நீர் போதும், இந்தக் கொசுக்கள் உற்பத்தி பெருக… மீண்டும் நீர் பிடிக்கும் சமயம், பழைய நீர் வெளியேறி புது நீரில் மீண்டும் இனப்பெருக்கம் செய்யத் துவங்குகிறது. 

மேல்நிலைத் தொட்டிகளிலும் இதே கதைதான்.  இது அரசின் நேரடித் தவறு என்று சொல்ல முடியாது.  இருப்பினும், அந்தத் தொட்டிகளைச் சுத்தம் செய்ய இதுவரை என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது அந்தந்தப் பகுதிவாசிகளுக்கு நன்கு தெரியும். டெங்குவுக்கு எதிரான நடவடிக்கை, நிலவேம்புக் கஷாயம் என்று இல்லாத இடத்தில் அந்தக் கொசுக்களைத் தேடிக் கொண்டிருப்பதில் பயனில்லை… மாறாக, அவை இனப்பெருக்கம் செய்யும் ஆதாரங்களை ஒழிப்பதன் மூலமே டெங்குவைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்…  மீன்களில்லாத குளங்கள், குட்டைகள் எதுவாயினும், அதனை உடனடியாக சுத்தப்படுத்துவது, அல்லது மீன்களை விடுவது, மெட்ரோ தொட்டிகள் முதற்கொண்டு அனைத்து நீர்நிலைத் தொட்டிகளையும் சுத்தம் செய்து, அதற்கு மூடி இடுவது, ரெயில் பெட்டிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளைச் சுத்தம் செய்வது - இவையே டெங்குவிற்கு எதிராக முதலில் நாம் செய்ய வேண்டியது. 

இதற்கான ஆதாரம், பணக்காரர்கள் அதிகமாக பாதிக்கப்படாததன் இரகசியம்… என்னதான் வீட்டிற்குள் ஏசி போட்டுக் கொண்டு அமர்ந்தாலும், வெளியே வரும் போது டெங்கு கொசுக்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு கடி போதும்.  ஆனால், இவர்கள் பகுதிகள் அதிகம் பாதிக்கப்படாததன் காரணம், நிலத்தடி நீர் பொதுப் பயன்பாட்டிற்கும், குடிநீருக்கு கேன் வாட்டர் மற்றும் ப்யூரிபையர் பயன்படுத்துவதால், தண்ணீர் சேமித்து வைக்க இவர்களுக்குத் தேவை ஏதும் இல்லை… மேலும், தொட்டிகளைப் பராமரிப்பது, மூடி வைப்பது போன்ற வேலைகள் மெயின்டெனென்ஸ் என்ற பெயரில் செய்யப்படுவது.  நீச்சல் குளங்கள் கூடத் தினம் நீரைச் சுத்திகரித்து பயன்படுத்துவார்கள்.   சுற்றியுள்ள எந்தப் பகுதியிலும், நல்ல தண்ணீர் தேக்கி வைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதே இவர்கள் பாதிக்கப்படாததன் காரணம். மீறி பாதிக்கப்படும் ஒன்றிரண்டு பேரும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று வந்திருப்பவர்கள் என்று கூடச் சொல்லிவிட முடியும்.

இப்பொழுது, டெங்கு எங்கிருந்து பரவக் கூடிய வாய்ப்பு அதிகம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று தோன்றுகிறது.  யாருக்காகவும் காத்திருக்காமல், அந்தந்தப் பகுதி மக்களே, கூட இதனைச் செய்து விட முடியும்… இனியேனும் உங்கள் பகுதியில், மெட்ரோ வாட்டர் தொட்டியோ, அல்லது எந்தத் தொட்டி திறந்திருப்பினும், ஒரு கணம் செலவழித்து மூடி விட்டுச் செல்லுங்கள்… வாய்ப்பு கிடைத்தால் அடிக்கடி சுத்தமாக இருக்கிறதா என்றும் பார்த்துக் கொள்ளுங்கள்… நிலவேம்புக் குடிநீர், பப்பாளி, சின்ன வெங்காயம், வெல்லம் போன்ற வைத்தியங்கள் அனைத்தும் தற்காப்புக்கு மட்டுமே உதவும், நிரந்தரத் தீர்வு டெங்கு கொசுக்களை ஒழிப்பது மட்டும்தான்… ஏனெனில், இனிமேலும் சமூகப் பொறுப்பு நம் கடமையல்ல என்று நினைத்தீர்களேயானால், இயற்கை இதை விடக் கூட கொடிய வகையில் தண்டிக்கத் தயாராகலாம்… யார் கண்டது…  

   

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top