டிமானிடைசேஷன் – மத்திய அரசு சொல்லுவது நிஜமா???
  • 12:12PM Oct 03,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 12:12PM Oct 03,2017 Chennai, Tamil Nadu 600003, India

நாடெங்கும் ஊடகங்கள் Demonetisation படுதோல்வி என விவாதித்துக் கொண்டிருக்கும் போது, சிலர் மட்டும் அது ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என இன்னமும் நம்பிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.  மாண்புமிகு மோடி அவர்கள் மற்றும் பழைய நிதியமைச்சர் இவர்களெல்லாம் ஜிடிபி குறைந்தது கூட நல்லதற்கே எனும் விதமாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.  அவர்கள் திட்டத்தை அவர்கள்தான் தாங்கிப் பிடித்தாக வேண்டும்.  இந்தக் கட்டுரையின் மூலம் அவர்களுக்குத் தெரியாத எதையும் நாம் சொல்லிவிடப் போவதில்லை.  இருப்பினும், தேசபக்தர்கள் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு.

Demonetisation எதிர்பார்த்த திசையில்தான் பயணிக்கிறது என்றும், நாட்டின் கறுப்புப் பணம். பணவீக்கம் குறைந்ததாகச் சொல்லப்படுவது.

தவறு. பண வீக்கம் குறைந்ததாகச் சொன்ன அதே அரசுதான், Demonetisation முடிந்த பிறகு, மூன்று மாதங்களுக்குள்ளாக அதிமுக ஆர்,கே,நகர் தேர்தலுக்கு 87 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும், ஒரு மாதத்திற்குப் பிறகு இரட்டை இலை சின்னத்திற்காக தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததாகவும் வழக்கு போட்டிருக்கிறது.  இவை இரண்டும் உண்மையென்றால், கறுப்புப் பணமோ, பணவீக்கமோ கொஞ்சம் கூட குறையவில்லை என்பது உண்மை. பொய்யென்றால் – அது இந்தக் கட்டுரைக்கான தலைப்பு இல்லை என்பதால் பிறகு பார்க்கலாம்.

Demonetisation மூலம் குறைந்த ஜிடிபி தற்காலிகமானதே.  போகப் போக அது அதிகரிக்கும்.

சென்ற ஆண்டு 6.1 சதவீதமாக இருந்த ஜிடிபி, இந்த ஆண்டு 5.7 சதவிகிதமாக சரிந்து உள்ளது.  ஜிடிபி என்பது பெட்ரோல் விலை போலல்ல, கச்சா எண்ணெய் பேரல் விலை போல ஏறி இறங்க… அது தொடங்கப்பட்ட புதிய தொழில்கள், உண்டான வேலை வாய்ப்பு, தனி நபர் செலவிடும் திறன் என அனைத்தையும் சார்ந்தது. அப்படிப் பார்த்தால், புதிதாகத் தொழில்கள் துவங்கப்படவில்லையென்பதும், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை என்பதும், ஏற்கெனவே இருக்கும் தொழில்கள் நஷ்டமடைந்த காரணத்தால் ஜி,டி,பி குறைந்துள்ளது நிதர்சனம்.  முதலில் சமநிலைக்கு வந்து, பின்னர் உயர வேண்டும் என்பதால் குறைந்த பட்சம் இரண்டு மூன்று வருடங்களில் தொடங்கி, பாதிப்பின் தண்மைக்கேற்ற காலத்திலேயே ஜிடிபி வளரும்.  இயற்கை, அரசின் சித்தாந்தம், போர் நிலை போன்ற விஷயங்களைக் கணக்கிட்டால் சிறிது காலம் கண்டிப்பாகப் பிடிக்கும்.

பழைய நோட்டுக்களில் 99 சதவிகிதம் வங்கிக்கு வந்துவிட்டது.  அது ஈட்டக் கூடிய வட்டி விகிதம் எவ்வளவு பெரிய வரம்???

இந்த கணிப்பும் தவறு.  அனைத்து வங்கிகளின் வட்டி விகிதம் பெரும்பாலும், கடன்கள் மூலமான வரவுகளாகவே இருக்கிறது.  இன்ப்ரா-ஸ்ட்ரக்சுரல் டெவலப்மென்ட் போன்ற வருமானங்கள் இருப்பினும் அவை ஏற்கெனவே வங்கிகள் மூலம் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் பெரிய மாற்றங்கள் நிகழாது. மேலும், வங்கிகள் நிலுவையில் இருக்கும் வராக்கடன்களோடு ஒப்பிடுகையில் இந்தத் தொகை மிகவும் குறைவே.  கடன் கொடுத்து க்ரடிட் ரிப்போர்ட் ஏறத்தாழ அனைவருக்குமே கொடுக்கப்பட்டுள்ளது.  கடன் வாங்கத் தகுதியுள்ளவர்கள் ஏற்கெனவே முறைப்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், அதிகத் தொகை பற்றில் இருப்பதால் எந்தப் பிரயோஜனமுமில்லை… மீறிக் கொடுக்கப்படும் கடன்கள், வராக்கடன்களாக மாறும் வாய்ப்பு அதிகமுள்ளதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  சேமிக்கப்பட்டிருக்கும் பணத்திற்கு வட்டி விகிதம் குறையும் என்பதைத் தவிர வேறு பெரிய பலன்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

வருமானத்திற்கு அதிகமாக வங்கிகளில் முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கெதிராக இன்கம்டாக்ஸ் ரெய்டு மிகப் பெரிய தொகையை அரசு கஜானாவில் சேர்க்கும்.

முதலில் கறுப்புப் பணத்தைப் பற்றிய சரியான புரிதலில்லாத பார்வை இது.  வரி செலுத்தாமல் ஏய்க்கப்பட்ட பணத்தைக் கறுப்புப் பணமாக நினைத்தீர்களானால் உங்களுக்கு ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.  உங்கள் தேடுதலில் சிறிய அளவு வட்டி வரவு செலவு அல்லது புதிய பணக்காரர்கள், அரசு அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் வேண்டுமானால் சிக்குவார்களே ஒழிய, நீங்கள் எதிர்பார்க்கும் பெரிய பணத்தை தொடக் கூட முடியாது.  ஏனெனில், அனைத்துப் பெரிய கல்வி நிறுவனங்கள் துவங்கி, பெரிய நிறுவனங்கள் வரை தங்களுக்கென தனி ட்ரஸ்ட் வைத்திருக்கிறார்கள்.  அப்படி ட்ரஸ்ட் கணக்கில் காட்டப்படும் சொத்தையோ அல்லது வருமானத்தையோ வருமான வரித்துறையால் நெருங்கக் கூட முடியாது.  2 கோடி கணக்குகளில் 2.5 லட்ச ரூபாய் சிக்குகிறது என்று கற்பனை செய்ய வேண்டாம், பெருக்கிப் பார்த்தால் வரும் தொகை மொத்தம் 5 லட்சம் கோடி. உண்மையில், மதிப்பிழப்பு செய்யப்பட்டதே 15.5 லட்சம் கோடிதான். 99 சதவீதம் திரும்பியது என்று யோசித்தால், கணக்கு எங்கேயோ நன்றாக உதைக்கவில்லை???

RBI நிலைமையை விரைவில் சரி செய்யும்.

உண்மையில், தன் நிலையையே RBI உடனடியாக சரி செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்.  25,000 கோடி செலவு பண்ணி அச்சிடப்பட்ட பணத்தால், வருவாய் என்பது வெறும் 15,500 கோடி ரூபாய்தான். வங்கிப் பணி பாதிப்பு, வேலை பார்த்த ஊதியம் இவற்றை வங்கிகள் RBI கணக்கில் எழுதிவிடும்.  இது அனைத்து ஊழியர்களுக்குமான மூன்று மாதப் பணி என்பதால், இதனாலும் RBI-க்கு இழப்புகள் அதிகம். மேலும், பணத்தை பட்டுவாடா செய்வதில், காலதாமதத்தை சரி செய்வது, ATM இயந்திரங்கள் உதிரிப் பாகம், பொருத்துவதற்கான தொழில்நுட்ப அறிவுள்ள ஆட்கள் என அச்சிடப்பட்ட தொகையை விட RBI குறைந்தபட்சம் நாலைந்து மடங்கு அதிகப் பணத்தை செலவிட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானது.  இதன் காரணமாகவே அது இந்த வருடம் செலுத்த வேண்டிய டிவிடெண்ட்டில் பாதி அதாவது 33,000 கோடி மட்டுமே செலுத்தியுள்ளது.  வங்கிகளிடமிருந்து பழைய கணக்குகள் அனைத்தும் தீரும்வரை RBI-க்கு வரவுக்கான சாத்தியக் கூறுகள் குறைவு என்பதால், RBI இப்போது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. 

சுவிஸ் பாங்க் கணக்கில் உள்ள நபர்கள் பற்றிய தகவல்கள் 2019ல் கிடைக்கும். அப்பொழுது அவைகளை மீட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியும்…

2019 ஜனவரியில் சுவிஸ் பாங்க் தகவல்களை கொடுக்pfறது என்றே வைத்துக் கொள்வோம்.  மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல்.  பண மீட்பு என்பது அப்பொழுது சாத்தியப்படாது.  சரி, தேர்தல் பிரச்சாரத்திற்கு காங்கிரஸூக்கு எதிராகப் பயன்படுத்தினால்கூட, போன தேர்தல் காலத்தில் வெளியிடப்பட்ட பட்டியல் பொய்யா என்ற கேள்வி எழும்.  இதுவே உண்மையிலேயே தவறு செய்தவர்களைப் பிடித்தால் கூடத் தப்பிக்க வைக்கும் சாக்காக அமைந்து விடும்.  எனவே, தற்போதைக்கு அந்தப் பணத்தாலும் நமக்கு பரயோஜனமில்லை.

பணம் வந்ததே ஒரு மாயையாக இருக்கும் பொழுது, அந்தப் பணத்தை வைத்து புதிய தொழில்கள் துவங்குவதும், பொருளாதாரத்தைத் தூக்க நிறுத்துவதும் உடனடியாக நடக்கக் கூடியவை அல்ல. இவற்றைச் சரி செய்து புதிய தொழிலைத் துவங்கவே ஆண்டுகள் பல தேவைப்படும். இதற்கு மேலும் சந்தேகங்கள் இருந்தால், ஒரே பதில்தான்… காலம்… 

 

 

Top