மொபைலும், மரண விளையாட்டுக்களும்!!!
  • 12:41PM Nov 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 12:41PM Nov 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

முன்பெல்லாம் பிள்ளைகளை வளர்க்க வீட்டோடு தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா இருந்தார்கள்.  போன தலைமுறையினருக்கு அப்பா கூட இல்லை, அம்மா மட்டும்தான். இன்றோ, மொபைல் போனும், ஆயாவும்தான் பிள்ளைகளின் கதி என்றாகிவிட்டது.  6 மாதத்தில் ப்ளே ஸ்கூலில் விடும் வரைதான் தாயின் பொறுப்பு என்றாகி விட்டது.  வளரும் பிள்ளைகள் வீட்டில் குறும்பு செய்தால், கையில் மொபைலைக் கொடுத்து ரூமிற்குள் அடைத்துவிட்டு – கேட்டால், safety என்று சொல்கிறார்கள். நிஜமாகவே உங்கள் பிள்ளைகள் பத்திரமாக இருக்கிறார்களா என்று கேட்டால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

சில மாதங்களுக்கு முன், Pokeman Go என்ற விளையாட்டு சிறுவர்களை மொபைலைப் பார்த்தவாறே தெருத்தெருவாக ஓட விட்டு, அதனால் ஏற்பட்ட விபத்துகளினால் நிறையச் சிறுவர்கள் உயிரிழந்தனர்.  ஒருவழியாக மக்கள் போராடி, அந்த விளையாட்டை தடை செய்து நிம்மதிப் பெருமூச்சு விட, இப்பொழுது இன்னுமொரு ஆபத்து வந்திருக்கிறது. தனியாக இருக்கும் சிறுவர்களை சாட்டிங் மூலம் விளையாட அழைத்து, அவர்களது உயிருக்கே உலை வைக்கும் ஒரு சைக்கோ விளையாட்டு – Blue Whale...

அப்படி என்ன இருக்கிறது இந்த விளையாட்டில்??? பெரிதாக ஏதும் இல்லை.  இது ஒரு சாட்டிங் க்ரூப்.  இதில் சேரும் மாணவர்களை பல்வேறு விதமான சவால்களைக் கொடுத்து செய்யச் சொல்வது (50 சவால்கள்).  இந்தச் சவால்கள் அனைத்துமே தன்னை வருத்திக் கொள்ளும் செயல்கள்.  அதில் ஒன்று, நீலத் திமிங்கிலம் ஒன்றை கைகளில் வரைய வேண்டும், கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு.  இப்படி படிப்படியாக உயர்ந்து கொண்டே போய் இறுதியில் தற்கொலை அல்லது கொலை செய்வதுதான் கடைசி சவால்.  (Die or watch someone close to you die!!!)

11-லிருந்து 24-வயதிற்குள் உள்ள இந்திய சிறுவர்கள் அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள். இரு சிறுவர்களால், இந்த விளையாட்டு தற்போது இந்தியாவிலும் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 11 வயது பையன் ஒருவன் தற்கொலை செய்ய முயற்சி செய்யும் போது, சக மாணவனால் காப்பாற்றப்பட்டான்.  துரதிர்ஷ்டவசமாக மற்றொரு 14 வயது சிறுவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். .இதில் மிகவும் அருவருக்கத்தக்க விஷயமே - அவர்கள் செய்யும் அனைத்திற்கும், போட்டோ, வீடியோ போன்ற ஆதாரங்களை இணைக்க வேண்டும் என்பதுதான்.

கொடுமையான விஷயம் என்னவென்றால், இதனைக் கண்டுபிடித்த புடெய்கின் என்ற ரஷ்ய சிறுவனிடம் கேட்ட போது, வாழவே தகுதியில்லாத மனநிலை கொண்டவர்களை சமுதாயத்திலிருந்து அகற்றக் கண்டுபிடித்ததாகச் சொன்னதுதான்.  இது வெவ்வேறு பெயர்களில் உலா வருவதும், யார் இந்த க்ரூப்களை கண்ட்ரோல் செய்கிறார்கள் என்பதும் பெரிய குழப்பமாகவே இருந்து வருகிறது.  உங்கள் குழந்தைகளுக்கு என்ன கற்றுக் கொடுக்கிறோம் என்பதில் கவனம் இருப்பதைப் போலவே, என்ன கற்றுக் கொள்கிறான் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரின் இன்றியமையாத கடமையாகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top