உலக அளவில் ஒரு பெரும் சக்தி - ஓர் ஆசிய நாடு முதன்முறையாகப் பெற்ற ராணுவ வெற்றி..!
  • 10:50AM Feb 08,2019 Japan
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 10:50AM Feb 08,2019 Japan

your image

1904 ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ரஷ்யா-ஜப்பான் போர் தொடங்கியது. ரஷ்யாவின் வ்ளாடிவோஸ்டெக் துறைமுகம் குளிர்காலத்தில் உறைந்துவிடும் என்பதால், பசிபிக் கடலில் ஆண்டுமுழுவதும் பயன்படுத்தக்கூடிய துறைமுகம் ஒன்று ரஷ்யாவுக்குத் தேவைப்பட்டது.

இதற்காக, சீனாவிடமிருந்து ஆர்த்தர் துறைமுகத்தைக் குத்தகைக்குப் பெற்றிருந்தது. 1895இல் நடைபெற்ற முதல் சீன-ஜப்பானியப் போரில் சீனா தோல்வியுற்று பலவீனமாக இருந்ததால், மஞ்ச்சூரியா, கொரியா உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்யாவின் ஆதிக்கம் பரவிவிடும் என்று ஜப்பான் அஞ்சியது.

ஏற்கெனவே பதினாறாம் நூற்றாண்டில் சைபீரிய தூரக்கிழக்குப் பகுதிகளைக் கைப்பற்றி தன் பேரரசை ரஷ்யா விரிவாக்கியிருந்தது. மஞ்ச்சூரியாவில் ரஷ்யா ஆதிக்கத்தைத் தான் ஏற்பதாகவும், கொரியாவை விட்டுத்தர வேண்டுமென்றும் ஜப்பான் கோரியதை ரஷ்யா ஏற்கவில்லை. போரை அறிவித்த ஜப்பான், அறிவிப்பு ரஷ்யாவை அடைவதற்கு 3 மணிநேரம் முன்பே தாக்குதலைத் தொடங்கிவிட்டு, பின்லாந்துப் போரில் 1809இல் முன்னறிவிப்பின்றி ஸ்வீடனை ரஷ்யா தாக்கியதைச் சுட்டிக்காட்டியது.

1907இல் நடைபெற்ற இரண்டாம் ஹேக் அமைதி மாநாட்டில்தான் முறையான போர் அறிவிப்பின்றி தாக்குதல் தொடுக்கக்கூடாது என்பது பன்னாட்டுச் சட்டமாகியது. 20ஆம் நூற்றாண்டு அரசியல், போர்கள் ஆகியவற்றை நிர்ணயித்த பல்வேறு காரணிகளை இப்போர் அறிமுகப்படுத்தியது.

தொழிற்புரட்சியின் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளும் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டதால், வரலாறு அதுவரை கண்டிராத புதிய தொழில்நுட்பங்கள் இப்போரில் நிலத்திலும், நீரிலும் பயன்படுத்தப்பட்டன. அதிவேக பீரங்கிகள், எந்திரத் துப்பாக்கிகள், துல்லியமாகக் குறிபார்த்துச்சுடும் துப்பாக்கிகள் உள்ளிட்டவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.

ரஷ்யா 8 நாட்கள் கழித்தே போரை அறிவித்தது. அமைதி உடன்பாட்டுக்கு ஜப்பான் தயாராக இருந்தாலும், ஏற்காமல் போரிட்ட ரஷ்யா கடும் தோல்விகளைச் சந்தித்தது.

நவீனகாலத்தில், ஐரோப்பிய நாடொன்றிற்கு எதிராக ஓர் ஆசிய நாடு முதன்முறையாகப் பெற்ற ராணுவ வெற்றியால், மீண்டும் உலக அளவில் ஒரு பெரும் சக்தியாக ஜப்பான் மாறியது. அமெரிக்காவின் இடையீட்டில் போர்ட்ஸ்மவுத்தில் ஏற்பட்ட ஒப்பந்தம் ரஷ்யாவின் விரிவாக்க நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தது.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top