Shoreline

பொளக்கட்டும் பற பற தெறிக்கட்டும் நம்ம அலப்பறை! இனிமே விமானம் கூட தேவையில்லை ஜாலியா சோலோவா பறந்து போக வேண்டியது தான்!

Jun 10 2021 08:19:00 AM

மனிதன் தோன்றிய நாள் முதல் புதிது புதிதாக யோசித்து நிறைய விஷயங்களை கண்டுபிடித்து வருகிறான். கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களும் இந்த 21ம் நூற்றாண்டில் சாத்தியமாகி வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மிகவும் கடினமாக இருக்கும் சில செயல்களைக்கூட இப்போது எளிதாக செய்து முடிக்க முடிகிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை சரியான முறையில் பயன்படுத்தினால் அது உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை பயக்கும்.

copter-pack

பறவைகளுக்கு பறக்கும் சக்தி உள்ளது, மனிதனுக்கு இயற்கையாகவே பறவைகளைப்போல பறக்கும் சக்தி கிடையாது. ஆனால் பறவை எப்படி பறக்கிறது என்று ஆராய்ச்சி செய்த ரைட் சகோதரர்கள் விமானம் என்ற கருவி ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த விமானத்தின் உதவியால் மனிதனால் பறக்க முடியும் என்பது சாத்தியமாக்கப்பட்டது. பிறகு ஹெலிகாப்டர், விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

copter-pack

விமானம், ஹெலிகாப்டர் இவற்றிலிருந்து சற்று மாறுபட்டது பாராசூட். இதிலும் பறக்கலாம். ஆனால் விமானம் பறக்கும் உயரத்தில் இதை வைத்து பறக்க முடியாது. மனிதன் பறப்பதற்காக நாள்தோறும் புதுவிதமான கருவிகளை வடிவைமைப்பதில் கவனத்தை அதிகமாக செலுத்தி வருகிறான். அப்படி ஒரு புது கருவியைத்தான் தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் கண்டுபிடித்துள்ளனர். காப்டர் பேக் என்றழைக்கப்படும் இந்த சாதனம் மனிதர்களை ஒரு குறிப்பிட்ட உயரம் வரை பறக்க வைக்கும் சக்தி கொண்டது.

copter-pack

இந்த சாதனத்தின் சோதனை முயற்சி தற்போது வெற்றியடைந்துள்ளது. ஹெலிகாப்டரில் பயன்படும் மோட்டார், விசிறி போன்ற அமைப்புகளை வைத்து இந்த புதுவித பறக்கும் சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் சமயங்களில் இதிலிருக்கும் பாராசூட்டை பயன்படுத்தி பத்திரமாக தரையிறங்கும் வகையில் இந்த காப்டர் பேக் தயாரிக்கப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான கண்டுபிடிப்பாக கருதப்படும் இந்த காப்டர் பேக் விரைவில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

copter-pack

இந்த சாதனம் வந்துவிட்டால் குறுகிய தூரம் கொண்ட உள்நாட்டு இடங்களுக்கு விரைவாக பயணம் மேற்கொள்ள முடியும். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளை உயரத்தில் இருந்து எளிதாக கடந்து செல்ல முடியும் என்றாலும் மரங்கள், காடுகள், வன விலங்குகள் இவற்றுக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படுத்தாமல் பயணம் செய்வதும் அவசியமாகும். எனவே இந்த சாதனத்தின் பாதுகாப்பு தன்மை குறித்தும் இதனால் இயற்கைக்கு எதாவது பாதிப்பு இருக்குமா என்றும், புயல், மழை போன்ற சமயங்களில் இது செயல்படும் தன்மை கொண்டதா போன்ற பல்வேறு கோணங்களிலும் இதுகுறித்து ஆராயப்பட்டு வருகிறது.