நதி நீரை வாய்க்கால் மூலம் இணைக்க முடியுமா???
  • 11:04AM Sep 25,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:04AM Sep 25,2017 Chennai, Tamil Nadu 600003, India

       சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மிகப் பெரிய திட்டமான நதிநீர் இணைப்புத் திட்டம் நிறைய தடைகளைத் தாண்டி நிறைவேற வேண்டியிருக்கும்.  அதிலும், பணமதிப்பிழப்பின் போது மத்திய அரசு காட்டிய வேகத்தை விடவும் அதிக வேகத்தில் – கிட்டத்தட்ட 5.5 இலட்சம் கோடிகள் மதிப்பில் போடப்பட்டிருப்பதால் சற்று கவனமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.  காரணம், அந்தத் தொகை வரையறுக்கப்பட்ட பாதைகளுக்கான இடத்தைக் கொள்முதல் செய்யக் கூடப் பற்றாது. அதற்கு மேல் பணி செய்யப் போவது யார்? எல் & டி போன்ற நிறுவனங்களின் மூலம் சுங்கச் சாவடிகள் போன்று ஏதாவது திட்டமா??? அனைத்து மாநில அரசுகளும் சம்மதம் தெரிவித்தனவையா போன்ற பல்வேறு கேள்விகள் பொதுமக்கள் மனதில் எழாமல் இல்லை. 

ஏற்கெனவே, குஜராத்தில் போடப்பட்ட முன்னோடித் திட்டம் என்று சொல்லப்பட்ட நர்மதா மீது சோலார் பேனல் போடும் திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்பட வேண்டிய காரணத்தாலும், வெறும் வாய்க்கால் மீது போடப்பட்ட போது ஏற்பட்ட செலவுகளினாலும், சூரிய வெளிச்சம் படாத நீரின் தன்மை கெட்டு நாற்றமடித்ததாலும் அந்தத் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. தற்போது நர்மதை மீதான எந்த இடத்திலும் சோலார் பேனல்கள் இல்லையென்று கேள்விப்படுகிறேன்…

சரியாகத் திட்டமிடப்படாமல் நிறைவேற்றப்படும் பெரிய திட்டங்கள் யாவும், தோல்வியில் முடிந்ததற்கு நாமே பல விஷயங்களைச் சொல்ல முடியும். உதாரணத்திற்கு, இன்று வரை கூடங்குளம் அனல் மின்சார நிலையத்தில் ஏதோ ஒரு அலகில் உற்பத்தி நிறுத்தம், அல்லது ஏதோ ஒரு அலகில் உற்பத்தித் துவக்கம் என்பதைச் செய்தித்தாள்களில் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.  சரி, நதிநீர் இணைப்பில் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் என்ன? அதை அரசு எவ்வாறு கையாள்கிறது என்று பார்த்தாலே திட்டத்திற்கான புரிதல் விளங்கிவிடும்.  முதலில், அனைத்து மாநிலங்களின் ஒப்புதல்… மத்திய அரசு பாஜக ஆளும் மாநிலங்களில் முதல் கட்டமாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கும்போதே மற்ற மாநிலங்களின் ஒப்புதல் பெறப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.  அடிப்படையே தோல்வி என்ற நிலைதான், ஏனெனில் அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளிக்காத வரையில், தேசிய நதி நீர் இணைப்பு என்பது சாத்தியமாகாது.

சரி, இதனை ஏற்றுச் செயல்படுத்தி முடிப்பதற்கான காலம்??? இதுவும் கேள்விக் குறிதான். காரணம், இயற்கையாக நதிகளின் நீர் நகர்வுக்கான ஆதாரம் மணல்.  இந்தத் திட்டத்திற்கு அத்தனை மணல் கண்டிப்பாக சாத்தியமில்லாத ஒன்று.  அதுவும் வாய்க்கால்கள் மூலம் இணைப்பு என்பதன் அடிப்படை முற்றிலும் தவறானது.  வாய்க்கால்கள் முழுவதும் காங்கிரீட் போடப்பட வேண்டும், நீரினால் பாதிப்படையாத தொழில்நுட்பம் கொண்ட சிமெண்ட் கலவையோடு… தவறும் பட்சத்தில், ஆற்றின் வேகத்திற்கேற்ப குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.  இதில் இன்னொரு பிரச்சினை, வறட்சிப் பிரதேசங்கள் அதுவரை வானம் பார்த்த நிலமாக இருந்தாக வேண்டி இருக்கும். 

அடுத்தது செயல்பாட்டு முறை… எவரைக் கொண்டு செய்யப் படுகிறது என்ற கேள்வி மிக முக்கியமானது.  காரணம், பெரிய நிறுவனங்களிடம் போவதால், தற்போது கடனிலும், விவசாயம் இன்றியும் வாடும் விவசாயிகளின் பிரச்சினைகள் காரணமாக, இந்தத் திட்டம் முடியும் போது விவசாயி என்று ஒருவராவது மிச்சம் இருப்பார்களா என்ற கேள்வி கண்டிப்பாக எல்லார் மனதிலும் ஏற்படுவதுதான். எனவே, பெரிய நிறுவனங்களைத் தவிர்த்து விட்டு 100 நாள் வேலைத் திட்டம் போல, இதிலும் விவசாயிகளை ஈடுபடுத்த முயற்சிக்கலாம்.  அது அவர்களுக்கு வாழ்க்கையை நோக்கிய போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும்.  அதை விடுத்து, பெரிய நிறுவனங்களுக்குச் செயல்பட உரிமை வழங்கப்படுமானால், மத்திய அரசின் மீது ஏற்கெனவே இருக்கும் கார்ப்பரேட் அடிமை என்ற சொல் உண்மையென மக்கள் எண்ணத் துவங்கி விடுவார்கள்… 

நடுவில் இருக்கும் யாராலும் பேசப்படாத விஷயம் ஒன்றும் உள்ளது.  மத்திய அரசு அதிகப்படியான தண்ணீரை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கவே இந்த நதிநீர் இணைப்பு என்று சொல்லி வந்தாலும், தேசிய நதிநீர் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த வருடத்திற்கான அறிக்கையில், அதிகப்படியான தண்ணீர் இந்தியாவில் எந்த நதியிலும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  அப்படி என்றால், இல்லாத உபரி நீரைக் கொண்டு வர, இத்தனை செலவுகள் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது.  மேட்டுப்பாங்கான பிரதேசங்களுக்கான இவர்களது திட்டமும் இதே போலத்தான்.  வாய்க்கால்கள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் மேட்டுப் பிரதேசங்களுக்கு நீரேற்று முறையில் செலுத்தப்படும் என்பதுதான் அது.  அதாவது தண்ணீர் தொட்டியில் தண்ணீர் மோட்டார் மூலம். அல்லது தொழில்நுட்ப வசதி மூலம் ஏற்றப்படுவதையே நீரேற்று முறை என்கிறோம்.  நதி நீருக்குச் சாத்தியமா என்பது உங்களுக்கே தெரியும்.

இப்பொழுது, தலைப்பிற்கு வருவோம்… கங்கை மற்றும் பிரம்மபுத்ரா நதிகளில் வெள்ளம் வந்தால், சராசரியாக மூன்று மடங்கு அதிக நீர் அந்த நதியில் பாயும்.  அதாவது, 4 கிலோமீட்டர் அகலமுள்ள கங்கையில் வெள்ளம் வந்தால், 12 கிலோமீட்டர் அகலம் பாய வேண்டிய அளவு நீர் அந்த வேகத்துடனும், அகலத்துடனும் 4 கிலோமீட்டர்கள் உள்ள ஆற்றில் பாயும்.  சற்று யோசியுங்கள்… நதிநீரைக் கொண்டு செல்லும் வாய்க்கால்கள் அந்த நீரைக் கடத்த வேண்டுமானால், குறைந்தபட்சம் எத்தனை அகலத்தில் இருக்க வேண்டும்???  அந்த அளவுக்கான நிலம் ஆற்றுப்படுகையை ஒட்டி எந்த இடத்தில் கையகப்படுத்த முடியும்???

ஒருவேளை செய்து விட்டோமென்று வைத்துக் கொண்டாலும், நாம் பேசுவது ஓபன் சேனல் பற்றி… ஒரு ட்யூப் அல்லது பைப் என்றால் தண்ணீர் வெளியே வர வாய்ப்பில்லை, குழாயின் வடிவம் வேகத்திற்கேற்ப ஓடும்.  ஆனால், வாய்க்கால்கள் மேலே திறந்தவை.  ஆற்றுப்படுகையின் அருகே கொஞ்ச தூரத்திற்காவது தாழ்வான பிரதேசங்களைக் குறி வைத்துத்தான் வாய்க்கால் அமைக்க வேண்டி இருக்கும். வெள்ளம் வருகின்ற காலங்களில் உபரி நீர் முன்னர் நதியைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டுமே பாதிக்கும்… ஆனால், தற்போது வாய்க்கால் செல்லுமிடமெல்லாம் வெள்ள அபாயம் இல்லையென்று சொல்லிவிட முடியுமா??? மேட்டுப்பாங்கான இடத்தில் உள்ள நீரேற்று முறை உபரி நீர் அனைத்தையும் வெளியேற்றாவிட்டால் என்ன ஆகும் என்பதைத் திட்டமிட்டிருக்கிறார்களா என்ன???

நிலத்தடி நீரோட்டம் என்ற ஒன்றும் இருக்கிறது.  அது பாதிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் நூறு சதவீதம் இருக்கிறது… காரணம், நீர் தனித்தனியாக இருந்தாலும், திசை நகர்வு என்பது கூடுமானவரை ஒரே மாதிரிதான் இருக்கும்.  அதாவது நடுவில் ஒரு பேப்பரை வைத்து மேலே இரும்புத் துகள்களை வைத்து காந்தத்தினை கீழே வைத்து இழுத்தால், காந்தம் செல்லுமிடமெல்லாம் மேலே உள்ள இரும்புத்துகள் நகர்வதைப் போல நகர்வதை, திசை நகர்வு என்கிறோம்.  திரவங்களுக்கு அந்தத் தன்மை இருக்கிறது.  அதிலும் தண்ணீருக்கு அதிகமாகவே இருக்கிறது.  அதனாலேயே, ட்யூபில் உறிஞ்சி மேலே வழிய விடப்படும் நீர், கீழிருந்து மேலாகப் பாய்கிறது. 

இவற்றைத் தாண்டி அந்த இடங்களில் உள்ள இயற்கை, நீர், பறவை, விலங்கினம் போன்றவற்றைப் பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை.  சமீபத்தில் ஒரு விளம்பரம் வேகமாகப் பரவி வருகிறது.  அது நதிகள் இரத்த நாளங்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும்.  அவர்கள் ஒன்றே ஒன்றை மட்டும் மறந்து விட்டார்கள். Artery, Cappillary இரண்டும் இரத்த நாளங்கள்தான். இரண்டின் முடிவும் வெகு அருகருகேதான் இருக்கும்… இரண்டையும் இணைத்தால் என்ன ஆகும் என்று உங்கள் மருத்துவரிடம் விசாரித்துப் பாருங்கள்.  காரணம், ஒன்று இதயத்திலிருந்து நல்ல இரத்தத்தை உடலுக்குக் கொண்டு வருவது, இன்னொன்று இதயத்திற்கு உடலிலுள்ள நச்சுக் கழிவுகளை சுத்திகரிக்கக் கொண்டு செல்வது.

நதி நீர் இணைப்பு பற்றி நாம் பேசுமுன், முதற்கட்டமாக இருக்கும் ஏரி, குளங்களை, நீர் வடிகால்கள், கிளை வாய்க்கால்கள் என நீர், நீர் நிலையைச் சென்றடையும் அத்தனை வழிகளையும் தூர் வாரிச் செப்பனிடுங்கள்… இல்லாவிட்டால், ஓட்டைக் குடத்தில் நீர் பிடித்த கதைதான்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top