கொரோனா வந்த பிறகு மாஸ்க் போடும் பழக்கம் அதிகமானது. ஆனால் உபயோப்படுத்தப்பட்ட முகக்கவசத்தை கண்ட இடங்களில் தூக்கி எறிவது மக்களிடையே காணப்படும் கெட்ட பழக்கமாக இருக்கிறது. இதன் விளைவாக பறவைகள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்பட்டு இறக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பிரச்சனை குறித்து லண்டன் பலக்லைக்கழக விஞ்ஞானிகள் கூறுவது என்னவென்றால் கொரோனாவிலிருந்து மக்களை காக்க எடுக்கும் நடவடிக்கைகளால் மற்ற உயிரினங்கள் பாதிக்கப்படுவதை யாரும் கவனிப்பதில்லை. பயன்படுத்தி விட்டு அப்புறப்படுத்தப்படும் முகக்கவசம், கையுறைகள் மற்றும் இதர மருத்துவ கழிவுகள் ஒரு டைம் பாம் போல செயல்பட்டு விலங்குகளை கொல்வதாக வேதனையுடன் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் மாஸ்க்கில் சிக்கியிருக்கும் ஒரு பறவையின் புகைப்படத்தை சமீபத்தில் பதிவிட்டிருந்தனர். அதேபோல நரிகள் மற்றும் வேறு சில பறவைகளும் முகக்கவசத்தில் சிக்கித்தவிக்கும் காட்சிகளும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒரு பென்குயின் வயிற்றிலும் சில பறவைகளின் கூடுகளிலும் மருத்துவ பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிஞர்கள் கேட்டுக்கொள்வது யாதெனில் கொரோனா மருத்துவ கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றி விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்பதாகும். ஒரு சில நாடுகளில் கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதால் மக்களும் மருத்துவத்துறையினரும் விழிப்புணர்வோடு செயல்பட்டு முகக்கவசம் மற்றும் இதர கழிவுகளை சரியான முறையில் அகற்றுவது அவசியமாகும்.