குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்???
  • 14:21PM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:21PM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India

சென்ற தலைமுறையினர் குழந்தைகளைக் கண்டிப்புடன் தங்கள் வார்த்தையை மீறாத, தங்களுக்குப் பயப்படும்படியாக பிள்ளைகளை வளர்த்தனர்.  அது நல்ல பலனளித்தாலும், அப்படி வளர்ந்த பிள்ளைகள் தங்கள் வீட்டில் தங்களுக்கு கிடைக்காத சுதந்திரமும், உரிமையும் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நினைப்பில் பிள்ளைகளுக்கு மிகவும் செல்லம் கொடுத்துக் கெடுத்து விட்டனர்.  இதற்கு இன்னொரு காரணம் தனியார் பள்ளிகள் மற்றும் அரசும் கூட.  குழந்தைகளை அடிப்பது என்பது மிகப்பெரிய தவறு என்பது போல இவர்கள் இருவரும் உருவாக்கிய மாயையால், தற்போது நிறையப் பள்ளிகளில் மாணவன் என்ன குறும்பு செய்தாலும், ஆசிரியர் அதைத் தட்டிக் கேட்க முடியாத சூழ்நிலையை உருவாக்கி விட்டது.  யானையைச் சிறிய வயதில் சங்கிலியால் கட்டிப் பழக்கப்படுத்தாவிட்டால், பெரிதான பிறகு அதனை எதைக் கொண்டும் அடக்க முடியாது.  அல்லது, அடக்கும் முறைகள் மிகக் கடுமையாக இருக்கும்.

அதற்காக மிருகத்தை அடிப்பது போன்ற அடிக்கும் நான் ஆதரவளிப்பவன் நானில்லை.  பயம் ஏற்படும் அளவிற்கு அளவாக, சிறிய வயதிலேயே அடி விழுந்தால் – கொஞ்சம் பெரிதாகும் போது அடி விழும் என்றாலே சொன்ன பேச்சைக் கேட்க ஆரம்பிப்பார்கள். அடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.  ஒருவேளை நீங்கள் உங்கள் பிள்ளையை என்ன செய்தாலும் பரவாயில்லை, யாரும் மிரட்டக் கூடக் கூடாதென்று சொன்னால் பள்ளிப் பருவத்திலே இயல்பாக நண்பர்களுக்குள் வரும் சண்டைக்கு கூடப் பெரிய அளவில் பதிலடி கொடுக்கத் தோன்றும்.  உதாரணம், ஹரியானாவில் சென்ற மாதம் வகுப்பறையில் சக மாணவனைத் துப்பாக்கியால் சுட்ட 15 வயது மாணவன், சென்ற வாரம் தமிழ்நாட்டில் 11 வயது மாணவனை கூடப் படிக்கும் நண்பர்களே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம், வகுப்பாசிரியரை பேப்பர் கட்டிங் ப்ளேடால் கொல்ல முயன்ற மாணவன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

சரி, அடுத்த விஷயத்துக்கு வருவோம். ஆரோக்கியமான மனநிலை. கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, ஏமாற்றம் தாங்க முடியாமல் வளர்க்கப்படும் பிள்ளைகளில் ஒன்றுதான் இரண்டு நாட்களுக்கு முன் இந்துஜா என்ற பெண்ணை, தாய் மற்றும் தங்கையுடன் சேர்த்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு பற்ற வைத்தது.  சிறிய வயதிலேயே இந்த ஏமாற்றத்தைத் தாங்கும் பக்குவத்தை ஊட்டி வளர்க்காமல் இருந்தாலும், அவனை எவ்வளவுதான் வல்லவனாக வளர்த்தாலும் பிரயோஜனமில்லாமல்தான் போகும்.  என் நண்பரின் 5 வயதுப் பெண்ணை ஒரு முறை ஷாப்பிங் அழைத்துச் சென்றேன்.  பிடித்த பொருள் இருந்தால், இடுப்பிலிருந்தபடியே தாவுவாள்.  பிடிக்க முடியாமல் இறக்கி விட்டால், அந்தப் பொருளை எடுத்துக் கொண்டு மனப்பாடம் செய்த மாதிரி வேண்டும் வேண்டுமென்று ஒப்பித்துக் கொண்டே இருப்பாள். அன்றே அதைச் சரி செய்து விட்டேன். இன்னமும் இரண்டு மூன்று வருடங்கள் விட்டிருந்தால் அதன் பிறகு அவளைச் சரிசெய்ய வாய்ப்பு கிடைக்காமலேயே போயிருக்கும்.

பிள்ளைகளை அதிகக் கண்டிப்புடன் வளர்ப்பது எப்படி அவர்களை தன்னிச்சையாகச் செயல்பட முடியாதவர்களாய் மாற்றி விடுமோ, அதே போல பிள்ளைகளுக்கு அதிகச் செல்லம் கொடுப்பது அவர்களை ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள இயலாதவர்களாக மாற்றி விடுகிறது.  வல்லவர்களாக வளர்ப்பது என்பதைத் தவிர்த்து அவர்களை யதார்த்தமான மனிதனாய் வளர்ப்பது ஒன்று மட்டுமே இப்பொழுது மிக அவசியம்.  காரணம், தோல்விகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள் தங்களுக்கோ, அல்லது அடுத்தவர் உயிருக்கோ பாதிப்பு ஏற்படுத்துவார்களாயின் எத்தனை வல்லவர்களாயிருந்தாலும், நீங்கள் எத்தனைச் செலவு செய்திருந்தாலும் – அவர்களின் எதிர்காலம் என்பது கேள்விக் குறிதான்…  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top