எங்கங்க அந்த 200 ரூவா???
  • 13:36PM Oct 16,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 13:36PM Oct 16,2017 Chennai, Tamil Nadu 600003, India

எங்கங்க அந்த 200 ரூவா???

போன வாரம் முதல்முதல்ல முகப்புத்தகத்துல அந்த நோட்டைப் பார்த்தப்ப கொஞ்சம் மெர்சலாத்தான் இருந்துச்சு… நமக்கு வேற பச்சையும், ப்ளூவையும் தவிர வேற கலர்ல நோட்டைப் பார்த்து பழக்கமில்லையா, முதல்ல போட்டோவைப் பார்த்து பயபுள்ளைங்க விளையாடுறாங்கன்னு நினைச்சுட்டேன்.  அப்புறம் ஒவ்வொருத்தரும் அந்த நோட்டைப் பத்திப் பேசும் போதுதான் நிஜமாவே இது 200 ரூவாதான்னு தெரிஞ்சது… இரண்டு நாள் கழிச்சு டீக்கடையில சில்லறை வேணும்னு கேட்டப்போ ஒருத்தன் ரெண்டு 50 குடுத்தான்.  நான் அவனை சட்டையப் பிடிச்சு அடிக்காத குறை.  கலர் ஜெராக்ஸ வச்சு ஏமாத்துறியாடான்னு கேட்டா, சீரியல் நம்பரைக் காட்டறான்.  அப்பத்தான் அது புதுசா விட்ட 50 ரூபாய்னு புரிஞ்சுது… அவன் மறுபடியும் வேணுமான்னு கேட்க, வேண்டாம்னு சொல்லிட்டேன்.  ஒரு முன் ஜாக்கிரதைதான்.

அப்ப இருந்தே ஒரே நமச்சல். இந்த 200 ரூவா நோட்டையும் நேருல பார்க்கனும்னு.  விதி, பழக்க தோஷத்துல சம்பளத்துல ATM ல எடுத்துட்டேன்.  சரி, ஒரு வாட்டி மறுபடி உள்ள போட்டுட்டு பேங்க்ல 200 ரூவா காசா வாங்கலாம்னு யோசிச்சா, அது வேற பயமா இருக்கு.  இப்பத்தான் பெட்ரோல் விலை, சிலிண்டர் விலைன்னு எப்போ எதை ஏத்தறானுக, எந்த ரூல்சை மாத்துறானுகன்னே தெரியலையே… உள்ள போட்டு அதுக்கு 100, 150 புடிச்சிட்டான்னா என்ன பண்றது.  இருந்தாலும் மெஷினை விட்டு நகரலையே… யாருக்காச்சும் அந்த 200 ரூவா வருதான்னு பார்த்தா யாருக்கும் வரலை…

வூட்டுக்கு வந்தப்புறம் - சரி காலைல பேங்க் பக்கம் போனா, ஒரு 500 ரூவா குடுத்து 2 200 ரூவாயும், ஒரு 100 ரூவாயும் வாங்கிடலாம்னு யோசிச்சா, விடாம 3 நாளு லீவாமா.  என்னடா இது நம்ம காவி தாகத்துக்கு வந்த சோதனைன்னு சுத்தி சுத்தி பார்க்கிறேன் கண்ணுல படலையே.  ஒரு வேளை புதுசா முதல் ரெண்டு, மூணு தபா வர்ற நோட்டு பூரா பணத்தை பதுக்கறவன்தான் வாங்கிட்டு போயி ப்ரஷ்ஷா பதுக்கி வைப்பானுக போல.  ஒருவழியா லீவு முடிஞ்சு போய் பார்த்தா, அண்ணன் வடிவேலு இரசிகரா அல்ல வடிவேலுவேவான்னு தெரியலை அப்படி ஒரு டைமிங், அப்படி ஒரு எக்ஸபிரஷன்… எலே, எப்போ குடுத்தா, எப்ப வந்து கேக்குறன்னாரு…  ம|றபடி எப்போ வருதோ அப்பத்தான்னு என்ட் கார்டு போட்டுட்டாரு…

விடுவமா??? சன்னமா காதாண்ட போய், சரி சாரு… எப்பவாச்சும் ATM-ல போடுவீங்கல்ல அப்போ சொல்லுங்க, முதல் ஆளா வாங்கிக்கிறேன்னு சொன்னா, டிசம்பர் வரச் சொல்றாரு… வந்துச்சு பாரு காண்டு… இம்புட்டுக்காண்டி நோட்டு, அத பாக்கனும்னா மூணு மாசமான்னு கேட்டா, அவரும் சுனா பானா மாதிரி, எனக்கு மேலயே தாண்டிட்டாரு.  இப்பத்தாண்டா ATM மெஷின்ல நோட்டை வச்சு அளவே எடுத்திருக்கோம்.  அதுக்கு லெட்டர் அனுப்பி, மேல இருந்து ஹெட் ஆபீஸ் போய், அவரு சம்பந்தப்பட்ட ஆபீஸ்ன்னு போய்ட்டே இருக்காரு… கிறங்கிப் போய் கீழ விழுந்து எந்திரிச்சா மனுஷன் சைனாவுல சுத்திட்டிருக்காரு… முடிச்சுட்டான்னு பார்த்தா – ஆர்டர் குடுத்து, அவங்க பேக்டரி போய்… னு பேசிட்டே இருக்கான். ஒரே ஓட்டமா ஒடியாந்துட்டேன்.  இப்படிப் பேசினா ஒரு நாளைக்கு ஒரு கஸ்டமரை முடிச்சிருவானே, எப்படி மேனேஜராப் போட்டாங்கன்னு யோசிச்சுட்டே வந்தேன்.

­

ஏய்யா, அதான் போன நவம்பர்ல சஸ்பென்ஸ் அது இதுன்னு செய்யாம விட்டீங்க… இப்பவாச்சும் செஞ்சுட்டு நோட்டை விட்ருக்கலாமே… ஆனா ஒண்ணு, நோட்டை அடிச்சதுல நம்ம நாட்டுக்கு லாபம் வந்துச்சோ இல்லையோ, சைனாக்காரன் இந்த மெஷினை மாத்தி மாத்தியே நல்லா சம்பாரிச்சிருப்பான்… எம்புட்டு ATM மெஷினு… என்ன இருந்து என்ன, கடைசி வரைக்கும் கண்ணுல காட்டலையே... ஹலோ… எக்ஸியூஸ் மீ… நீங்களாவது பார்த்தீங்களா??? எங்கங்க அந்த 200 ரூவா நோட்டு???

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top