ரஜினி ரசிகன்!!!
  • 07:14AM Nov 02,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 07:14AM Nov 02,2017 Chennai, Tamil Nadu 600003, India

       நான் ஒரு சின்ன கம்பெனில வேலை பார்த்துட்டு வர்ற ஒரு சாதாரணமான ஆளு… பெரிய படிப்பெல்லாம் படிக்கலைங்கறத விட ஏறலை.  மூணு வயசுல விக்ரம் பார்த்துட்டு கமல் பிடிக்கும்னு நானும் என் பிரெண்டும் பேசிட்டிருக்கிறப்போ, நெஞ்சுல துப்பாக்கில சுட்ட பிறகும் கெட்டவங்களை எதிர்த்து நின்னு சண்டை போட்ட ஒரு ௲ப்பர் ஹீரோ அறிமுகமானாரு…  அந்தப் படம் “நான் சிகப்பு மனிதன்” – அந்த ௲ப்பர் ஹீரோ ரஜினி…  அப்புறம் தேடித்தேடி அவரு நடிச்ச எல்லா படத்தையும் எப்படியாச்சும் பார்த்துடுவேன்.  அப்பல்லாம் பெரிசா அறிவு கிடையாது. ரஜினிகிட்ட சொன்ன எந்தப் பிரச்சினையும் சண்டைப் போட்டு ஜெயிச்சிடுவாருங்கிறது நம்பிக்கை.

       ரஜினி மாதிரி அநியாயத்தை எதிர்க்க ஆரம்பிச்சு ரொம்பச் சின்ன வயசுலயே ஏரியால ஒரு மரியாதை வர ஆரம்பிச்சது.  எங்க ஏரியாக்குள்ள புதுசா யாரு வந்தாலும் முதல்ல யாருன்னு கேட்கிறது நாங்களாத்தான் இருக்கும்.  வயசு ஏற ஏற வெறி மாதிரி ஆயிடுச்சு.  படம் சரியா இல்லைன்னு சொன்னா அடிதான்.  எங்களுக்கே படம் பிடிக்கலைன்னா அன்னைக்கு அந்த தியேட்டர் காலி.  சீட்டை அடிச்சு உடைச்சு, சில நேரத்துல ஸ்கீரீனைக் கூடக் கொளுத்தியிருக்கோம். இரசிகர் மன்ற ஷோ டிக்கெட்டெல்லாம் இரசிகர் மன்றம் மூலமா கிடைக்கும். தியேட்டருக்கு 50 பேருக்குன்னு… என்ன பெருந்தன்மைன்னு சும்மா ஜிவ்வுன்னு ஏறும்.  அப்புறம்தான் தெரிஞ்சது தியேட்டர் ஒரு ஷொ ஓட்டறதுக்கு இவ்வளவு காசு குடுக்கனும், அந்தக் காசை டிக்கெட்டா கழிச்சுக்குவாங்கன்னு. மினிமம் கியாரண்டின்னு அப்போ சொல்வாங்க. 

       இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு ரிலீஸ் அன்னைக்கு இரசிகர்கள் எல்லாரும் சேர்ந்து தியேட்டரையே வாடகைக்கு எடுத்துருவோம்.  அன்னைக்கு இரசிகர்களுக்கு மட்டும்தான் ரஜினி.  சில நேரத்துல படம் நல்லா இருந்துச்சுன்னா ரெண்டு மூணு நாள் கூட இப்படி ஓடும்.  எஜமான் படத்துல ஐஸ்வர்யா ரஜினியை சவுக்கால அடிக்கிற மாதிரி சீன் வரும்… ஒரு ரெண்டு மூணு மாசம் அந்தப் புள்ளைக்கு போன் போட்டு திட்டறது, வீட்டுக்கு லெட்டர் அனுப்பறதுன்னு ரொம்பவே காமிச்சுட்டாங்க.  ரஜினிகிட்ட கதை சொல்லப் போகும் போதே டைரெக்டர் பயந்துட்டேதான் போகனும்.  படம் ரிலீஸ் ஆகி, எந்த ஊருலயும் தியேட்டரைக் கொளுத்தலைன்னா அப்புறம் அந்தப் படம் கன்பர்ம் ஹிட்தான்.  கொஞ்சம் விபரம் புரியற வயசுல தளபதி வந்தப்போ, கல்யாணம் காதுகுத்துன்னு எந்த பங்ஷனுக்கு கேசட் கேட்டாலும் தளபதிதான்.

 

       கேசட் கடைல அந்த ஒரு படத்துக்கு மட்டும் ஒரிஜினல் பிரிண்ட் பத்து பதினைஞ்சு வச்சிருப்பாங்க.  ரஜினி இன்னைக்கு இப்படி இருக்காருன்னா அதுக்கு ஒவ்வொரு குப்பனும் சுப்பனும் அந்தளவுக்கு இருந்ததுதான் காரணம்.  ரஜினி மாதிரி ரஜினி மாதிரின்னு சொல்லிகிட்டு – ஏரியா தகராறுன்னாக் கூட அதை தியேட்டர்ல காட்ட மாட்டோம். சமயத்துல அடிக்க போறவனை நிறைய ரஜினி படத்துல முதல் நாள் பார்த்த அன்புல மாப்ளே, மச்சின்னு கொஞ்சிகிட்டு… அப்புறம் என்ன அந்தப் பிரச்சினை பைசல்தான்.  என்ன ஒண்ணு இப்பல்லாம் தலைவர் படத்தை ஒரு வாரம் இல்லாம பார்க்கிறதே கஷ்டமாயிருக்கு.  டிக்கெட் விலை, நெட்ல வாங்கறது ஒரு பக்கம்னா, எங்கள மாதிரி ஆளுங்கள்ல பெரும்பாலும் ஆட்டோ ஓட்டிகிட்டு, பட்டறை வேலை செஞ்சுகிட்டு குடும்பத்தை நடத்துறவங்கதான் அதிகம்… ரஜினியைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது… தியேட்டர் வாசல்ல முதல் நாள் போய் நின்னு, யாரோ வீட்டு விசேஷத்துக்கு போன மாதிரி இருக்கிறது ரொம்பக் கஷ்டம்…

       நாங்க இப்படி இருக்காம்னு கண்டிப்பா எங்க தலைவருக்குத் தெரியாது… தெரிஞ்சிருந்தா எங்கள மாதிரி ஆளுங்களுக்கு அவரு செலவுல அவரே போட்டுக் காட்டுவாரு.  ஏன்னா எங்களுக்குத் தெரிஞ்ச ரஜினி அவருதான்… முதல் நாள் பார்க்க முடியாம, விசிலடிக்க முடியாம… நாங்க சமாளிச்சுக்குவோம் தலைவா… இன்னைக்கு நேத்தா பார்த்துட்டிருக்கோம் உன்னை…    

Top