வருகிறது APPEET, A People’s Political Eligibility Entrance Test!!!
  • 10:35AM Sep 23,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 10:35AM Sep 23,2017 Chennai, Tamil Nadu 600003, India

ஜனவரியிலிருந்து பார்த்தால் 10க்கும் மேற்பட்ட இளைஞர் கட்சிகள், பிறகு அதிமுக அம்மா, அம்மா அதிமுக, ஜெ, தீபா பேரவை பிறகு மாதவன் அவர்கள் துவங்கிய கட்சி என நான்கு கட்சிகள்.  நடுவில், வலுப்பெறும் பிஜேபி, தற்போது கமல் மற்றும் ரஜினி ஆகியோரின் அரசியல் பிரவேசம்.  ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுத் தேர்தலில் நிற்கும் கட்சிகள், நிற்காத லெட்டர் பேடு கட்சிகள் என்ற 200 க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் எனத் தமிழக அரசியல் களம் இப்பொழுது அரசியல்வாதிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.  தமிழக மக்களுக்குத் தினமும் வேலைக்குப் போவதா அல்லது ஏதாவது போராட்டத்தில் பங்கேற்கவா என்ற குழப்பம் தினசரி ஏற்படுகிறது.  இதனைத் தடுக்க தமிழக இளைஞர்கள் சிலர் எடுத்திருக்கும் முயற்சிதான் இந்த APPEET – A People’s Political Eligibility Entrance Test. அதாவது, மக்களால் அரசியல்வாதிகளுக்கு வைக்கப்படும் நுழைவுத் தேர்வு. வோட்டுக் கேட்டு வரும் அரசியல்வாதியின் உண்மையான மனநிலையை அறிந்து கொள்ள மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வழி. 

அட, வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா??? இந்தத் தேர்வின் விதிமுறைகள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  அதாவது, மக்கள்தான் இந்த விடைத்தாள் திருத்துபவர்கள்.  மத்திய, மாநில அரசுகள் மற்றும் நீதிமன்றங்கள் நீட் மற்றும் நவோதயாவை ஆதரிப்பதன் மூலம் சிபிஎஸ்இ கல்வி முறையை ஆதரிப்பதால், அப்பீட் தேர்வுக்கான வினாத்தாளும் நீட் தேர்வு வினாத்தாள் போலவே 160 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில், தவறான பதில்களுக்கு மைனஸ் மதிப்பெண்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  மீதமுள்ள 40 மதிப்பெண்களில் மூன்று 10 மார்க் கேள்விகள், அவர்களின் கொள்கை, நிலைப்பாடு மற்றும் செயல்திறண் போன்றவற்றைச் சோதிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அவ்வளவுதான்.  என்ன 200 மதிப்பெண் தேர்வில் வெறும் 190 க்கு மட்டுமே கேள்விகள் என்று பார்க்கின்றீர்களா???  மீதமுள்ள 10 மதிப்பெண் அந்தத் தொகுதியிலுள்ள 30 சதம் வாக்காளர்களாவது குறைந்தபட்சம் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே வழங்கப்படும். 

அட்ரா சக்கை என்று மக்கள் கூச்சலிடுமுன், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களை நெறிமுறைப்படுத்த என்ன இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும்… 170 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கும் கட்சி, அது எதுவாக இருந்தாலும் அதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதே மக்களுக்கான ஒரே நிபந்தனை… தேர்வு என்று சொன்னாலே பாடத்திட்டம் தானே… அதுவும் இருக்கு… பொது அறிவு, சட்டம், விவசாயம், திட்டங்களைப் புரிந்து கொள்ளும் திறண், புதிய திட்டங்களுக்கான அடிப்படை இவற்றிலிருந்து சரிசமமாகப் பிரிக்கப்படுகிறது.  ஏன் இந்தக் கொலைவெறி என்றால், மக்கள் வாக்குறுதிகளை நம்பி அரசுக்கு வாக்களிக்கிறார்கள்.  அது நம்பிக்கை.  ஆனால், பின்னாளில் கொள்கை மற்றும் கருத்து மாற்றங்கள் மக்களுக்கு ஏமாற்றமளிக்கிறது.  அதுவுமில்லாமல் சிபிஎஸ்இ தேர்வு முறை பற்றிய விழிப்புணர்வு அனைத்து மக்களுக்கும் சென்றடைய இது ஒரு வழி செய்யும் என்ற நம்பிக்கையாகக் கூட இருக்கலாம். ஒரே ஒரு முறை கட்சி, மத, மற்றும் ஜாதி சார்ந்து வாக்களிப்பதை மக்கள் தவிர்ப்பார்களேயானால், உண்மையாக மக்களுக்கு உழைக்கக் கூடிய, மக்களைப் புரிந்து கொள்ளும் அரசு ஏற்படக் கூடும் என்ற நம்பிக்கையாகவும் கூட இருக்கலாம்.

கேள்விகள் General Language ஆன ஆங்கிலத்தில்தான் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எல்லாம் சரி, வினாத்தாள் எப்போது வரும்??? செப்டெம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என்று தெரிய வருகிறது.  மாற்றம் வேண்டுமானால், மாறித்தான் ஆக வேண்டும்… ஒருவேளை வெகு ஜனம் இதனை ஏற்றுக் கொண்டால், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஒரு நடிகரின் அறிமுகமோ, அரசியல் கட்சிகளின் செல்வாக்கோ, பணபலமோ இல்லாத ஒரு சாமானியன் கூட முதல்வராகவோ ஏன் பிரதமராகக் கூட வாய்ப்பு ஏற்படக் கூடும்… தேர்வுத் தாளின் தரத்தைப் பொறுத்தது அது… பொறுத்திருந்து பார்ப்போம்…

Top