வரலாற்றை புரட்டிப்போட்ட ஒரு கையெழுத்து.! சிங்கப்பூர் உருவாகக் காரணமான ஒப்பந்தம்..!
  • 10:48AM Feb 06,2019 Singapore
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 10:48AM Feb 06,2019 Singapore

your image

 

1819 ஆம் ஆண்டு தற்போதைய சிங்கப்பூர் உருவாகக் காரணமான ஒப்பந்தம் கையெழுத்தானது. சிங்கப்பூரின் பதிவு செய்யப்பட்ட வரலாறு, 3ஆம் நூற்றாண்டின் சீனக் குறிப்புகளில் பு-லுவோ-சுங் என்ற பெயரில் காணப்படுகிறது.

சாவக மொழியில் கடல் துறை என்னும் பொருளுடைய துமாசிக் என்ற சொல்லிலிருந்து உருவான, டெமாசக் என்ற பெயருடைய இப்பகுதிக்கு, 1299இல் வந்த ஸ்ரீவிஜய அரசின் இளவரசர் சாங்-நில-உத்தமா, இங்கு சிங்கம் என்றும் புதிய விலங்கைக் கண்டு, சிங்கபுர என்ற பெயரைச் சூட்டியதாக செஜாரா மலேயு என்ற இலக்கியம் கூறினாலும், மாற்றுக்கருத்துகளும் உள்ளன.

மஜாபகித் அரசின் படையெடுப்பைத் தொடர்ந்து, இதன் கடைசி அரசரான பரமேஸ்வரா என்னும் இஸ்கந்தர் ஷா, மலாய் தீபகற்பத்திற்கு இடம்பெயர்ந்து, மலாக்கா சுல்தானகத்தைத் தோற்றுவித்தார்.

ஐரோப்பியர்களால் மலாய் கைப்பற்றப்பட்டபோது, 1613இல் சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்திலிருந்த வணிகக் குடியிருப்பு போர்த்துகீசியர்களால் எரிக்கப்பட்டதைத்தொடர்ந்து, அடுத்த 200 ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் முக்கியத்துவமின்றிப்போனது.

போர்த்துகீசியர்களிடமிருந்து மலாயைக் கைப்பற்றிய டச்சுக்காரர்கள், மலாக்கா நீரிணையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஆங்கிலேய வணிகத்துக்கு இடையூறாக இருந்தது.

சுமத்ரா தீவிலிருந்த ஆங்கிலேயக் குடியேற்றத்தின் ஆளுனரான ஸ்டாம்போர்ட் ராப்ள்ஸ், இப்பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு ஒரு துறைமுகம் அமைக்க, கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்தியத் தலைமை ஆளுனராக இருந்த ஹேஸ்டிங்ஸ் பிரபுவிடம் அனுமதி பெற்றார்.

டச்சுக்காரர்களுடன் மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், இடம் தேடியலைந்த ராப்ள்ஸ், பயன்படாமலிருந்த சிங்கப்பூர் முகத்துவாரத்தைக் கண்டுபிடித்தார். அது ஜோகோர் அரசின்கீழிருந்த நிலையில், ஜோகோர் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது.

வெளிநாட்டிலிருந்த ஜோகோர் சுல்தானின் சகோதரரைக் கடத்திவந்த ராஃப்ள்ஸ், அவரை இப்பகுதியின் சுல்தானாக்குவதாகவும், அவருக்கு ஆண்டுக்கு 5,000 ஸ்பானிய டாலர்களும், இப்பகுதியின் ஜோகோர் ஆளுனருக்கு 3,000மும் தருவதாகக்கூறி இந்த ஒப்பந்தத்தைச் செய்தார்.

டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த துறைமுகங்கள் ஏராளமான கட்டணங்களை வசூலித்த நிலையில், சிங்கப்பூர் துறைமுகத்தை, குறைந்த கட்டணத்துடன், கட்டுப்பாடுகளற்ற துறைமுகமான ராஃப்ள்ஸ் அறிவித்ததால், மிகப்பெரிய வளர்ச்சியை சிங்கப்பூர் விரைவில் எட்டியது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top