என்னுடைய சொந்த ஊர் திருப்பூர் என்பதால், ஒரு கிலோமீட்டர் பைக்கில் கடப்பதற்குள், ஒரு பனியன் கம்பெனியாவது கண்ணில் தென்பட்டுவிடும். திருப்பூர், ஈரோடு, கோவை இதெல்லாமே தொழில்வளம் அதிகம் கொண்ட மாவட்டங்கள் என்பதால், மக்கள் நடமாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. சின்னதா ஒரு பெட்டிக்கடை வைத்தால் கூட பிழைத்துக்கொள்ளலாம்.
எனக்கு இந்த கம்பெனி பக்கம் போய் பழக்கம் கிடையாது. இருந்தாலும், கட்டிடத்திற்கு மேலே, பின்வரும் படத்தில் உள்ளதை போல ஒன்று தென்பட்டால், வெருகி வெருகி பார்த்துக்கொண்டே செல்வேன். பார்க்கும் போதெல்லாம் இவ்வளவு வேகமா சுத்துதே, கரண்ட் பில் என்னத்துக்கு ஆகறது என்ற யோசனையெல்லாம் வரும்.
ஒரு நாள், வீட்டுக்கு வெயரிங் பண்ண பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற போது, கடைக்கு வெளியில் இதுவும் வைக்கப்பட்டிருந்தது. கட்டிடத்திற்கு மேலே எப்படி சுத்துமோ, அதே போல சுற்றிக்கொண்டிருந்தது. கடைக்காரர் தெரிந்தவர் தான் என்பதால், "என்ன அண்ணே! இத ஆன் பண்ணியே வெச்சிருக்கீங்க? உங்களோடது வேற, தொழிலுக்கு வாங்கின கரெண்ட் கனெக்சன். பில் எகிறாதா? என்று கேட்டேன்.
அப்போ தான், இந்த மரமண்டைக்கு உண்மை என்னவென்றே தெரிந்தது. அதுக்கு கரெண்ட் கனெக்சன் எல்லாம் தேவையில்லையாம். காற்று அடித்தால், சும்மாவே சுத்துமாம். இந்த வாப்பாடு தெரியாமல், பட்டப்படிப்பு வேறு படித்திருக்கிறேன். சரி! சரி! அனுபவம் தான் நின்னு பேசும் என்று மனதை தேற்றிக்கொண்டு, இதனை எதற்காக கட்டிடத்திற்கு மேல் பொருத்துகிறார்கள் என்று கேட்டேன்.
பனியன் கம்பெனி மட்டுமல்ல, வெப்பம் உண்டாகும் இடங்கள், அதிக உயரத்தில் கூரை அமைக்கப்பட்ட கட்டிடங்கள் என்று, பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறதாம். அறைக்கு உள்ளே இருக்கும் வெப்ப காற்றினை உறிஞ்சி வெளியே தள்ளிவிட்டு, குளிர்ந்த காற்றை உள்ளே இழுக்கும். இதற்கு மின்சாரம் எதுவும் தேவையில்லை. மெதுவாக காற்றடித்தாலும் சுழலக்கூடியது.
சில இடங்களில் கட்டத்தின் கூரை, ரொம்ப உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அது போன்ற இடங்களில், குளிர்ந்த காற்று கூரையில் தங்கி, ஓடுகள் சேதமடையாமல் இருக்க இந்த வெண்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு நாள் சும்மா சுத்துதே என்று வேடிக்கை பார்த்த எனக்கு, பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா என்று தெரிந்த பின்னர் கொஞ்சம் ஷாக்கிங் தான். இன்னும் இது போல எவ்வளவோ இருக்கு. உங்கள் அனுபவத்தையும் எங்களிடம் பகிரலாம்.