Exquisite

உள்ளே போடும் Jockey-க்கு உள்ளேயே இப்படியொரு வரலாறு இருக்கா.. கேட்டா அசந்து போவீங்க..!

Jan 19 2019 01:45:00 PM

your image

 

1935 ஆம் ஆண்டு உலகின் முதல் briefs (கீழ்) உள்ளாடையை Coopers Inc நிறுவனம், அமெரிக்காவின் சிக்காகோவில் உள்ள தன் கடையில் விற்பனை செய்தது. ஆடை-அணிகலன் பொறியாளர் என்று குறிப்பிடப்பட்ட, Arthur Kneibler என்பவரால் வடிவமைக்கப்பட்ட இது, முக்கோண வடிவில் இருபுறமும் மூடி, முன்புறம் ஒய் வடிவப் பட்டை ( Y-Front brief ) பொருத்தப்பட்டு (தற்போதைய வடிவத்தில்) இருந்தது.

இதற்கு முந்தையதான முன்புறம் மட்டுமே மூடக்கூடிய உள்ளாடைக்கு, ஜாக்ஸ்ட்ராப் என்று பெயரிட்டிருந்த கூப்பர்ஸ் நிறுவனம், இதற்கு ஜாக்கி என்று பெயரிட்டது. மூன்றே மாதங்களில் முப்பதாயிரம் உள்ளாடைகள் விற்பனையானதால், நிறுவனத்தின் பெயரையே ஜாக்கி என்று மாற்றிக்கொண்டது கூப்பர்.

உண்மையில் மனிதனின் முதல் ஆடை கீழாடைதான். ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, தோலாலான கீழ் உள்ளாடைகள் அகழாய்வுகளில் கிடைத்திருக்கின்றன. பாலுறுப்பை மட்டும் மூடிக் கயிற்றால் கட்டிக்கொள்ளும் முக்கோண வடிவத் தோலாடைகளும் கிடைத்துள்ளன.

நீண்ட துணியை, கால்கள், இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொள்ளும் கோவணம்தான் துணியாலான மிகப் பழைய உள்ளாடையாகும். கி.மு.1300களைச் சேர்ந்த, எகிப்தின் டுட்டன்காமுன் அரசரின் கல்லறையில், அவர் பயன்படுத்திய பொருட்களுள், ஏராளமான லினன் துணியாலான கோவணங்களும் இருந்தன.

குளிர் பகுதிகளில் உள்ளாடையாகவும், வெப்ப மண்டலங்களில் மக்கள் இதை மட்டுமே, அதாவது வெளியாடையாகவும் அணிந்தனர். நடுக் காலத்தில், தொளதொளப்பான, காற்சட்டை போன்ற, காலிலிருந்து இடுப்பில், கயிற்றால் கட்டிக்கொள்ளும் ப்ரேயஸ் என்ற ஆடைகள் வந்தன.

முழங்காலுக்குக்கீழே இருந்த ப்ரேயஸ், பின்னர் குட்டையாக மாறியதுடன், இவற்றில் சிறுநீர் கழிக்க உதவியாக, பட்டன் அல்லது கயிறுகட்டும் திறப்பும் பொருத்தப்பட்டிருந்தது.

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நூற்பாலைகள் வளர்ந்ததால், மக்கள் தாங்களே தயாரித்துக் கொண்டதுமாறி, தயாரான உள்ளாடைகள் விற்பனைக்கு வந்தன.

இத்துறையில் ஏற்பட்ட போட்டி, புதுமையான வடிவமைப்புகளுக்கான தேவையை உருவாக்கியதைத் தொடர்ந்து, கூப்பர்ஸ் வடிவமைத்த ஜாக்கியே இன்றைய நவீன உள்ளாடையாக வாகை சூடியது. எலாஸ்டிக்காலான இடுப்புப் பட்டைகள் 1930களின் இறுதியில் வந்தன.