#Sri Lanka Tourism: எங்கேயும் எப்போதும் இயற்கை!! இயற்கையைத் தவிர வேறொன்றும் இல்லை!!!
  • 19:51PM Oct 15,2019 Colombo
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 19:51PM Oct 15,2019 Colombo

இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வரலாற்றுப் பிணைப்புகள் அதிகம் உண்டு. தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான பேர்களுக்கு இலங்கை பற்றிய ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. போர் பூமி, மொழி சண்டை நடக்கும் நாடு, நமது பரம விரோதிகள் ஆட்சி செய்யும் நாடு இப்படி பல பேர் பல மாதிரியாக இலங்கையை பற்றி நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். தமிழகர்கள் வசிக்கும் இலங்கைக்கு சுற்றுலாத்தளம் என்ற இன்னொரு முகமும் இருக்கின்றது. அந்த முகத்தை மிக அருகாமையில் இருக்கும் நாம் ஒரு போதும் சுவைத்ததே இல்லை என்பது தான் ஆச்சரியம். அமெரிக்கா வரை கூட சென்று வந்தாகிவிட்டது. ஆனால் பக்கத்தில் இருக்கும் இலங்கைக்கு ஒரு சுற்றுலாப்பயணத்தை மேற்கொண்டதே இல்லையே என்று கூறுபவர்களுக்காகவே இந்த பதிவு.

3.jpg

சமீபத்தில் ஆசியா கண்டம் முழுவதும் எடுக்கப்பட்ட சர்வேயில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள சிறந்த நாடுகள் என்ற தரவரிசையில் இலங்கை ஓர் அருமையான நாடு என்று கூறப்பட்டுள்ளது. இலங்கையில் இருக்கும் இயற்கையான அழகு, சுகாதாரம், அனுசரிப்பு, பருவநிலை மற்றும் சுற்றுலா வாசிகளுக்கான தாங்கும் வசதி ஆகியவற்றை பொறுத்து இந்த கவுரவம் இலங்கைக்கு கிடைத்துள்ளது. ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்து வந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு ஒரு நாள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெறும் ஆயிரத்து ஐந்நூறாக குறைந்துள்ளது.

4.png

இந்தியாவை பொறுத்தவரை இலங்கைக்கான டூரிஸ்ட் விஸா இலவசமாகவே தான் இருந்து வருகிறது. சென்னையில் இருந்து இலங்கையில் இருக்கும் கொழும்பு வரை விமானக்கட்டணம் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் வரை குறைந்தபட்சமாக செலவாகிறது. தங்கும் விடுதிகளின் விலைகள் கிட்டத்தட்ட இந்தியாவைப் போல தான். குறைந்தபட்சம் ஐந்நூறு முதல் இரண்டாயிரம் மற்றும் மூவாயிரம் வரை செலவாகிறது. ஒரு லட்ச ரூபாய் வாங்கும் சொகுசு விடுதிகளும் இங்கே ஏராளம். அதே போல இந்தியாவில் கிடைக்க கூடிய பெரும்பாலான உணவுகள் இலங்கையில் கிடைக்கும். மேலும் அவர்கள் பாரம்பரிய உணவுகளும் நம்மை கவரும் வகையில் அமையப்பெற்றிருக்கும்.

7.jpg

இலங்கையின் தலைநகரமான கொழும்பு ஒரு சுறுசுறுப்பான நகரம் என்று தான் கூறவேண்டும். இரண்டு நாட்கள் தங்கி சுற்றிப்பார்க்கும் அளவிற்கு இந்த நகரம் அமையப்பெற்றிருக்கிறது. அடுத்ததாக “அறுகம்பே” பீச். உலகத்தில் “சர்ஃபிங்” என்று விளையாடக்கூடிய புகழ் பெற்ற கடல் விளையாட்டு இங்கே மிகவும் பிரபலம். மற்றபடி இந்த கடற்கரையில் கிடைக்கப்படும் கடல் உணவுகள் உலக ஃபேமஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் அவரை இந்த பீச் படு பிசியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

6.jpg

அடுத்ததாக இலங்கையின் பாரம்பரிமிக்க கலை பொக்கிஷங்களை கொண்ட “சிகிரியா”. இதுவும் பெரும்பாலான சுற்றுலாப்பயணிகளின் மெயின் அட்ராக்ஷனாக இருக்கிறது. சுமார் 1114 அடி உயரம் கொண்ட ஒரு சிகரத்தின் உச்சியில் இருக்கும் கலை வேலைபாடுகள் கொண்ட கோவில் தான் இங்கே பிரபலமாக இருக்கிறது. இது உலக பாரம்பரிய சின்னம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பசுமையும் பெருமையும் இன்றும் நிலைத்திருக்கும் ஒரு இடம் தான் “கண்டி” இங்கே பழங்கால வரலாற்றுச்சிறப்பு மிக்க மன்னர்களின் குகை கோட்டைகளும், கோவில்களும் இருக்கின்றது.

2.jpg

அடுத்ததாக “யாளான்” தேசிய பூங்கா. ஏகப்பட்ட வனம் சார்ந்த விலங்குகள் இங்கே இருக்கின்றது. இந்த பூங்காவை சுற்றிப்பார்க்க ஒரு நாள் போதாது என்பது தான் உண்மை. இவை தான் இலங்கையின் நாம் முக்கியமாக பார்க்கவேண்டிய இடங்கள். ஆனால் இன்னும் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் இலங்கையில் இருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி. இயற்கையின் உன்னதத்தை இலங்கை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இறைவனின் சொந்த நாடு கேரளா என்றால் இறைவனின் சொந்த நகரம் இலங்கை என்றால் அது மிகையாகாது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top