#Alfred Hitchcock: ஒரு சைக்கோ உருவானவிதம்!!
  • 17:46PM Jul 06,2019 Hollywood
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 17:46PM Jul 06,2019 Hollywood

ஹாலிவுட்டில் ஒரு இயக்குனர் இருந்தார். அவர் தன் சொத்துகளை எல்லாம் விற்று ஒரு படமெடுக்கிறார். அதை திரையிட அவருக்கு இரண்டே இரண்டு தியேட்டர்கள்தான் கிடைக்கிறது. இத்தனைக்கும் அவருடைய முந்தைய திரைப்படம் ஒரு மெகா ஹிட்! அவரும் சாதாரண இயக்குனர் அல்ல, அதற்கு முன்பு நாற்பது படங்களுக்கு மேல் எடுத்த பிரபலமான இயக்குனர்தான். இருந்தும் ‘’அவருக்கு வயசாகிடுச்சு.. இனிமே அவரால ஹாரர் படமெல்லாம் எடுத்து ஜெயிக்கமுடியாது’’ என்று ஹாலிவுட் முழுக்க பேசிக்கொண்டனர். அதனாலேயே அவருடைய அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காமல், தன் வீட்டை விற்று சொந்த காசில் படமெடுத்து இரண்டே திரையரங்குகளில் வெளியிடப்பட்டது அத்திரைப்படம். இன்றுவரை உலகெங்கும் சினிமா கற்றுக்கொள்கிற ஒவ்வொருவருக்கும் பாடமாக இருக்கிறது அந்த திரைப்படம். படத்தின் பெயர் “சைக்கோ” இயக்கியவர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்.

222.jpg

ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் எடுத்த சைக்கோ திரைப்படம் குறித்து அறிமுகமெல்லாம் தேவையில்லை. இன்று வரை ஹிட்ச்காக் எடுத்த படங்களிலேயே சிறந்தது “சைக்கோ” படம் தான். அந்த படத்துக்கு இணையான ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் படத்தினை, அதற்கு பிறகு யாராலுமே, ஏன்? அவராலேயே எடுக்க முடியவில்லை.சைக்கோ” படத்தினை எடுக்கும் போது ஹிட்ச்காக் சந்தித்த போராட்டங்களை அடிப்படையாக கொண்டு ஹாலிவுட்டில் ஒரு படமெடுத்திருக்கிறார்கள். படத்தின் பெயரே “ஹிட்ச்காக்” தான். சரியாக 1959 ஆம் ஆண்டு, ஹிட்ச்காக்கின் “நார்த் பை நார்த்வெஸ்ட்” என்கிற திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடுகிறது. படத்தின் வெற்றிவிழாவில் ஒரு நிருபர் ஹிட்ச்காக்கிடம் ரிட்டையர்ட் ஆவது குறித்து கேட்க ஹிட்ச்காக்கிற்கு கோபம் வந்துவிடுகிறது. அப்போது அவருக்கு வயது 60! அவர் அதைப்பற்றியே யோசிக்கிறார். பத்திரிகைகள் சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களெடுக்கும் புதுமுக இயக்குனர்கள் பற்றி எழுதுகின்றன. “ஹிட்ச்காக்குக்கு வயதாகிவிட்டது. அவரால் இனி இப்படியெல்லாம் படமெடுக்க முடியாது’’ என்று மங்கலம் பாடுகின்றன. அது ஹிட்ச்காக்கை ரொம்பவே அசைத்துப்பார்க்கிறது. அந்த நேரத்தில் ஜேம்ஸ்பாண்ட் படமொன்றை (கேசினோ ராயல்) இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. ஆனால் அவர் அதை மறுத்துவிடுகிறார். நான் இன்னமும் மாஸ்ட்ர் ஆஃப் சஸ்பென்ஸ் தான் என நிரூபிக்க முடிவெடுக்கிறார். நல்ல கதையைத் தேடி அலைகிறார். “ராபர்ட் ப்ளாச்” என்கிற எழுத்தாளர் எழுதிய “சைக்கோ” என்கிற நாவல் குறித்து கேள்விப்பட்டு வாங்கி வாசிக்கிறார். இது தான் நம் அடுத்த படமென்று முடிவாகிறது. ஆனால் அதில் அவருடைய மனைவிக்கு விருப்பமில்லை. மனைவி, அவளுடைய நண்பருடைய கதையை, படமாக்க பரிந்துரைக்கிறார். ஹிட்ச்காக் விடாப்பிடியாக சைக்கோவை எடுத்தே தீருவேன் என்கிறார். அவருக்கு கதையில் பாதியிலேயே கதாநாயகி இறந்துபோவது மிகவும் பிடித்திருக்கிறது. அதைப்பற்றியே பேசுகிறார்.

13.jpg

தயாரிப்பு நிறுவனத்திடம், அவர் கதை சொல்லும் போது அவர்களும் “இது வேலைக்காவாது வேற கதை பண்ணலாமே” என்கிறார்கள். ஹிட்ச்காக் ஒரு பிடிவாதக்காரர், ‘சைக்கோதான்!’ என்கிறார். படத்துக்கு காசுபோட ஆளில்லை. தன் வீட்டை சொத்துகளை விற்று படமெடுக்க முடிவெடுக்கிறார்.  படமெடுக்கும் போதே அவருடைய மனைவிக்கும் இவருக்கும் ஏகப்பட்ட ஈகோ பிரச்சனைகள். அவருடைய மனைவிக்கும், நண்பருக்கும் தொடர்பிருக்குமோ? என அஞ்சுகிறார். பொருளாதார சிக்கல்கள். பல்வேறு மன உளைச்சல்களால் பாதிக்கப்படுகிறார். இருந்தும் தன் படத்தின் மீது நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடு உழைக்கிறார். பட வேலைகளை தொடங்குவதற்கு முன் ஊரில் கிடைக்கிற சகல சைக்கோ நாவல் புத்தகங்களையும் இவரே வாங்கி மொத்தமாக ஸ்டாக் பண்ணி வைக்கிறார். யாருக்குமே படம் வெளியாகும் வரை அந்த கிளைமாக்ஸ் சஸ்பென்ஸ் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். ஷூட்டிங் தொடங்குகிற நாள் அன்று படத்தோடு தொடர்புடைய ஒவ்வொருவரையும் அழைத்து இப்படம் குறித்து வெளியே எந்த செய்தியும் வரக்கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். ஒவ்வொரு நடிகரையும் நடிகைகளையும் பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார். நிரூபர்களிடம் இப்படம் குறித்து எதையுமே பேசமறுக்கிறார். சரியாக நடிக்க வரவில்லை என்றால் ஸ்டுடியோவிலிருந்து ஆவேசமாக விரட்டி அடிக்கிறார். சில காட்சிகளுக்காக நிஜமான சைக்கோவைப்போலவே நடந்துகொள்கிறார்.

15.jpg

தன் தாயை சைக்கோ கொலைகாரன் சுவரில் இருக்கிற துளை வழியாக எட்டி பார்க்கிற காட்சிக்காக நிஜமாகவே சுவரில் துளை போட்டு இன்னொரு நடிகை உடைமாற்றுவதை கவனிக்கிறார். குறிப்பாக குளியல் அறை கொலைகாட்சிக்காக ரொம்பவே மெனக்கெடுகிறார். பலமுறை படமாக்கியும் அக்காட்சி சரியாக வராததால் தானே டூப்பாக நடித்து அந்த காட்சியை படமாக்குகிறார். இறுதியில் டப்பிங் செய்யபடாத, இசை சேர்க்காத ஒரு காப்பியை விநியோகஸ்தர்களுக்கும் நண்பர்களுக்கும் ஸ்டுடியோவில் போட்டுக்காட்டுகிறார். யாருக்குமே திருப்தியில்லை. விநியோகஸ்தர்கள் படத்துக்கு தியேட்டர் ஒதுக்க தயங்குகிறார்கள். இரண்டு தியேட்டர்கள்தான் முடியும் என்று சொல்லிவிடுகிறார்கள். ஹிட்ச்காக் ஒய்ந்துவிடவில்லை. படத்தை மிகச்சிறப்பாக எடிட் செய்கிறார். குளியல் அறை கொலைக்காட்சியில், இசை வேண்டாம், என உறுதியாக மறுக்கிறார். அந்த இடத்தில் இசைக்கு பதிலாக விநோதமான ஒலிகளை பயன்படுத்துகிறார். பட விளம்பரங்களுக்காக, வெவ்வேறுவிதமான யுக்திகளை பயன்படுத்துகிறார். திரையரங்கத்தில் படம் தொடங்கியபின் யாருமே கட்டாயமாக திரையரங்குக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். என்பது தொடங்கி இன்னும் நிறைய யுக்திகளை பயன்படுத்துகிறார். இரண்டே தியேட்டர்களில் வெளியான திரைப்படம். சில நாட்களிலேயே அமெரிக்கா முழுக்க வெளியானது. மாபெரும் வெற்றியைப் பெற்றது. சினிமா மீது ஆர்வமுள்ள அனைவருமே பார்க்கவேண்டிய ஒரு திரைப்படம் இது. ஒரு படமெடுத்து ரிலீஸ்பண்ணுவது பிரசவ வேதனை என்று நம்மூர் டைரக்டர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. அந்த வேதனையை உணரவேண்டுமென்றால் இப்படத்தினை ஒரு முறை பார்த்தாலே உணர முடியும். ஒரு சிறந்த படத்தை எடுப்பதன் உழைப்பை உணரமுடியும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top