மெரீனா தடை…
  • 12:35PM Nov 02,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 12:35PM Nov 02,2017 Chennai, Tamil Nadu 600003, India

தமிழகம் குறிப்பாக சென்னை இளைஞர்கள் எதாவது ஒரு போராட்டம் என்று நினைத்தாலே உடனே நினைவுக்கு வரும் இடம் மெரீனா.  அந்தளவுக்கு ஜல்லிக்கட்டு போராட்டம் உலகளவில் பேசப்பட்டது.  அதே நேரம் தற்போதைய ஆளும் கட்சியோ, எங்கு போராட்டம் நடந்தாலும் மெரினாவை முதலில் காபந்து பண்ணி விடுகிறார்கள்.  இது உண்மையிலேயே எதற்காக… இப்படிச் செய்வது நல்லதா??? முதலில் அரசு தரப்பு எப்படி யோசிக்கிறது என்று பார்ப்போம்.  அரசு பின்னால் நடந்த விஷயம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ, அன்று நடந்த கலவரத்திற்கு மெரீனாவில் கூடியிருந்த இளைஞர்கள் காரணம் என்று நினைக்கிறது.  இரண்டாவது, அங்குள்ள இட வசதியின் காரணமாக மிகப் பெரிய அளவிலான கூட்டம் சேர்வது பெரிய அளவிலான கவன ஈர்ப்பாக மாறி, அரசை அந்தச் செயலை செய்ய வைக்கக் கட்டாயப்படுத்தும் என்று பயப்படுகிறது.  மிக முக்கியமாக போராட்ட குணம் வலுப்பெறாமல் இருக்க, மீண்டும் இவர்கள் அங்கு கூடாமல் இருக்க வேண்டியது அவசியம் என்றும் நினைக்கிறது. 

மெரீனா கலவரத்தின் போது, உண்மையில் என்ன நடந்தது என்று அங்கு அப்போது கூடியிருந்தவர்களுக்கே முழுவதுமாகத் தெரியாது.  விளையாட்டுத்தனமாகப் போராட்டம் ஆரம்பித்து அத்தனை நாள் அமைதியாக இருந்த இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவார்களா, அதுவும் கோரிக்கை நிறைவேறிய பிறகு என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. மெரினா முன்பு போல் அல்ல, இப்பொழுது அது ஒரு நினைவுச் சின்னம்.  தமிழர்கள் மத்தியில் உள்ள போராட்ட குணத்தையும், கலாச்சாரப் பண்பாடுகளையும், மொழியின் தொன்மை பெருமை அனைத்தையும் தமிழருக்கே அடையாளம் காட்டிய இடம்.  அங்கு மீண்டும் போராட்டம் நடத்தக் கூடாது என்பது அடிப்படை ஜனநாயகத்தை மீறிய செயல் என்றாலும், மக்களின் மனதில் ஆளும்கட்சியின் மீது இப்போது விழுந்த அவநம்பிக்கையின் விதையும் அதுதான்.

ஓபிஎஸ்ஸின் பலம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது இந்த அவநம்பிக்கையின் காரணமும் கூட.  போர்க் குணம் சொல்லி வருவதில்லை.  ஜனநாயகத்தை மதித்து தமிழர்கள் நடப்பதாலேயே இன்று வரை அரசால் தடையை நீட்டித்துக் கொண்டு இருக்க முடிகிறது என்பதுதான் உண்மை.  தொடரும் பிரச்சனைகளால், மக்களின் கோபம் வலுப்பெற்றுக் கொண்டேதான் போகிறது.  ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது மக்கள் எல்லா இளைஞர்களையும் தங்கள் பிள்ளைகளாக பாவித்துக் கொண்டு, உண்மையில் அப்பெரும் போராட்டத்தை இரசித்துக் கொண்டிருந்தார்கள்.  அது இன்னமும் அவர்கள் உள்ளங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.  காரணம், மக்கள் பிரச்சனைகளை காவல்துறையிடமோ, அரசிடமோ சொல்வதை விட்டு இப்போதெல்லாம் சமூக வலைத்தளத்திற்கு நேரடியாக வந்து விடுகிறார்கள்.

இது நிச்சயம் ஒரு நல்ல நீடிக்கும் அரசுக்கு நல்லதல்ல… ஒரு கண்டம் அளவுக்குப் பெரிய நாடான ரஷ்யாவிலேயே மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாமல் போனது.  அரசர்களாகத் தூங்கிய ஜார் வம்சத்தவர் அனைவரும் மறுநாள் கைதிகளாகி இருந்தனர்.  மக்களின் போராட்டம் என்பது அவர்களின் உணர்வுகளுக்கு ஒரு வடிகால்.  அதை மறுத்த அரசுகள் தூக்கி எறியப்பட்டிருக்கின்றன.  இங்கும் அரசு மக்களை திசை திருப்புவதாக எண்ணிக் கொண்டு, புதிது புதிதாக பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.  அவர்களுக்கான ஒவ்வொரு நம்பிக்கையாக சிதைத்துக் கொண்டே வந்தால் அது நல்லதல்ல.  ஊர்தோறும் அடித்து நொறுக்கப்படும் டாஸ்மாக் கடைகளாக மட்டுமே மக்களின் கோபம் இதுவரை வெளிப்பட்டு இருக்கிறது.

மெரினாவில் அரசுக்கு ஒரு நல்ல விஷயம். எத்தனை நேரடி எதிர்ப்பாளர்கள் இருந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.  ஆனால், இப்பொழுது பட்டிதொட்டியெல்லாம் தெருக்களில் நின்று போராடும் கூட்டம் எத்தனை என்பது அரசுக்கு தெரியாமலே போய் விடும்.  அனிதா விவகாரம் எவ்வளவு பெரியது என்பத அவர்கள் இன்னனமும் உணராமல் இருப்பதையே காட்டுகிறது… அது உண்மையில், அவர்களுக்கு அவர்களே சொல்லிக் கொண்டிருக்கும் சமாதானம் என்பதை அவர்கள் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.  மெரினாவையே பார்த்தாச்சு, இது என்ன என்று நினைப்பது கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

ஏனெனில், இலட்சம் ஆத்மாக்களின் ஒற்றைச் சங்கமம் – மெரினா!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top