சாமியார்களும், சாமானியர்களும்…
  • 12:20PM Nov 02,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 12:20PM Nov 02,2017 Chennai, Tamil Nadu 600003, India

தொழில்நுட்பம் சரியாக வளராத காலத்தில், செப்படி வித்தை என்ற தந்திரங்கள் மந்திரங்களாக மதிக்கப்பட்டது.  உதாரணத்திற்கு, பாதரசம் செலுத்தப்பட்ட எலுமிச்சம்பழம் உருட்டி விடப்பட்டால், அதே வேகத்தில் திரும்பி வரும்.  காரணம், உள்ளிருக்கும் பாதரசம். இதை வைத்து பேய் ஓட்டுவது, தகுடு எடுப்பது போன்ற அளவிலேயே மந்திரவாதிகள் செயல்பட்டு வந்தனர்.  உண்மையான சாமியார்களோ, சித்தர்களோ தங்கள் வேலையை எங்கும் வெளிப்படையாகக் காட்டிக் கொண்டதே இல்லை.  இவர்களைத் தவிர்த்து கோவில் மடங்களில் பல்வேறு வழிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கும் மடாதிபதிகள். இவர்கள் அனைவரும் மக்களின் நம்பிக்கையை முடிந்தளவுக்குப் பெற்று, அதன் காரணமாக ஓரளவுக்கு மரியாதையும், சலுகைகளையும் அனுபவித்து வந்தவர்கள். 

இவர்கள் அனைவரையும் தாண்டி ஒரு சாமியார் இனமுண்டு.  அது கார்ப்பரேட் சாமியார்கள்.  திடீரென்று தோன்றுவார்கள், மக்களின் நம்பிக்கையுடன் மடமும் சடாரென்று ஆசிரமம் ஆகிவிடும்.  சுற்றிலும் உள்ள அனைத்தும் இவர்களது சொந்தமாகி விடும்.  தெளிவாகப் பார்த்தால் இவர்கள் யோகா மற்றும் பேச்சுக் கலையிலேயே வல்லவர்களாக இருப்பது மட்டும்தான் இவர்களது சித்து விளையாட்டு.  வெளிநாட்டுப் பக்தர்களை உருவாக்கி அழைத்துக் கொண்டு வந்து இந்தியாவில் விட்டால், சாமானியன் உண்மையிலேயே சக்தி வாய்ந்தவனாக நினைக்கத் துவங்கி விடுவான்.  வெகு விரைவிலேயே அந்தப் பகுதியின் ஓட்டுப் போடும் நிர்ணய உரிமையைக் கேட்காமலேயே பெற்று விடுகிறார்கள். 

சமீபத்தில் கைதான ராம் ரஹிம் சிங் என்ற சாமியாருக்கு 5 மாநிலங்களில் இத்தகைய அந்தஸ்து இருந்திருக்கிறது.  பக்தர்கள் கொட்டிக் கொடுப்பது, ஆசிரமங்கள் விரிவாக்கத்திற்குத் துணை நிற்க – ஆலமரக் விழுதுகளாய் கிளை பரப்பத் துவங்கி விடுவார்கள்.  சர்ச்சைகளில் அடிக்கடி மாட்டிக் கொண்டாலும், சாமானியனின் பக்தி அவர்களைக் காப்பாற்றி விடுகிறது.  எவரேனும், முற்றும் துறந்தவர்தானே துறவி என்று கேட்டால், அவர்களது எளிய அங்கியைக் காட்டி விடுவார்கள்.  நான் பார்க்கவே மிகச் சிறியதாக கோவையில் துவங்கப்பட்ட ஒரு ஆசிரமம் இன்று பிரதம விருந்தாளிகள் வந்து போகும் ஆசிரமமாக மாறிவிட்டது. 

சாமானியனை ஈர்க்கும் விஷயங்கள், புரியாத ரசவாதம் எல்லாம் மேலும் மேலும் பக்தர்களை உள்ளே வந்து கொட்டும்.  இன்று இதன் காரணமாக நேரடியாக கார்ப்பரேட் ஆகவே மாறிவிட்ட ஒரு சாமியாரையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  உலகத்திலேயே துறவி ஒருவர் விளம்பரங்களில் நடிக்கும் கேலிக் கூத்தும் சாமானியனின் யாரையும் நம்பும் தன்மையினாலேயே ஏற்பட்டிருக்கிறது. ஆனால், எல்லாம் தெரிந்த இவர்களுக்குத் தெரியாத ஒரு சாமானிய குணமும் இருக்கிறது.

 

நம்பிக்கை இழக்கும் சமயத்தில் இவர்கள் எல்லாரையும் விட சாமானியன் வலுப்பெற்று விடுகிறான். உலகிலுள்ள பெரிய பெரிய சாம்ராஜ்யங்களைக் கலைத்தது, இந்த வெறும் சாமானியர்கள்தான். நாடுகளைத் துண்டாடியதும் அவர்கள்தான், ஜார் மன்னர்கள் துவங்கி, இன்றைய காலகட்டம் வரை சாமானியர்கள் மாற்றியெழுதிய சரித்திரங்கள் பல.  இன்றைய நாட்டின் நிலைமையும் அப்படித்தான் எதற்கோ அடிகோலிடுவது போலிருக்கிறது. எத்தனை முறை மாற்றியெழுதினாலும் வரலாறு ஒன்றை மட்டுமே திரும்பப் திரும்பக் கூறிக் கொண்டிருக்கும்.  அது எப்பொழுதுமே மாறாத சாமானியனின் நிஜ முகம்.   

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top