கமலுக்கும், இரஜினிக்கும்…
  • 08:08AM Oct 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 08:08AM Oct 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

       13 வருடங்களாகத் தமிழக அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்று ஆண்டவன் கட்டளைக்காகக் காத்திருந்த இரஜினிக்கும், 13 வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதிலிருந்து அரசியல் பிரவேசத்திற்கு அடி போட்ட கமலுக்கும் முதலில் பணிவான வணக்கங்கள்.  ஒரு காலத்தில் இருவருமே எனக்குத் தலைவர்களாக இருந்துள்ளனர்.  இரசிகன் என்றால் சாதாரண இரசிகன் அல்ல, தற்போது கிளிஷேவுக்காக இரசிகர்களாய் மாறிய நிறைய இளைய தலைமுறையினரினால் ஒதுக்கப்பட்ட முன்னால் இரசிகன்.  வெகுஜனத்தில் ஒருவன்.  அது இப்போது விஷயம் அல்ல… முதலில் கமல் அரசியலுக்கு வரும் அறிவிப்பு, திடீரென இரஜினிக்கு கிடைத்த ஆண்டவன் கட்டளைதான் இப்போது விவாதிக்கப்படப் போகும் பகுதி. 

       இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின்படி 21 வயதுக்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம்.  அவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை, இந்தியக் குடிமகனாக இருந்தாலே போதும்… அவ்வளவுதான்.  ஆகவே, இதன்படி இரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவதற்கு முழுத் தகுதியுடையவர்கள்தான்.  கர்நாடகா பிரச்சினை வரும்போதெல்லாம் இரஜினி ஏன் வாய்ஸ் குடுக்கலைன்னு கேட்டதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.  ஆனாலும், இப்போதைய அரசியல் என்ட்ரி ஐடியா இருந்திருப்பின், கொடுத்திருக்கலாமே என்று தோன்றாமல் இல்லை. இரஜினியின் உண்ணாவிரதத்தைப் பெரிதாகப் பேசும் அனைவரும், அதற்கு சில நாட்கள் முன்னால் தமிழகத்தின் அத்தனை நடிகர்களும் கலந்து கொண்ட பேரணியில் இரஜினி இல்லாததைப் பற்றி ஏன் பேசுவதில்லை???

       மக்களைப் பொறுத்தவரை கண்டிப்பாக ஏமாளிகள்தான் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டுதான் இந்தப் பிரவேசம்.  காரணம், அரசியல் கட்சி இன்னும் துவங்கவே இல்லை, வலுவான தலைமை இல்லாத ஆளுங்கட்சியை எதிர்த்துக் கமலாவது ஏதோ இரண்டு மூன்று மாதங்களாகப் பேசினார்.  இரஜினி இதுவரை பேசவில்லை… ஒருவேளை ஆண்டவன் கட்டளைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தால் அது இன்னமும் 13 வருடங்கள் ஆனால் என்ன செய்வது.  இருவரும் மத்திய, மாநில அரசாட்சி குறித்த தங்கள் நிலைப்பாட்டினை இன்னமும் வெளியிடக் கூட இல்லை, ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதைப் பற்றிக் கூட வெளியிடவில்லை…. அதற்குள் இரசிகன், இரசிகர் மன்றம் என்ற பெயரிலே ஆதரவு தெரிவித்து அற்புதமாக நாங்கள் அப்படித்தான் என்று சொல்பவர்களை என்ன சொல்வது???

       இப்படித்தானே மோடிக்கும் வாக்களித்தீர்கள்???  சரி, ஒரு தேர்தலில் ஜெயிக்க வைத்துத்தான் பார்ப்போமே, ஏதாவது செய்கிறார்களா என்ற பரிசோதனை முயற்சியினால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட முடிவு செய்வீர்களேயானால், தமிழகத்தில் லெட்டர் பேடு கட்சிகள் முதற்கொண்டு மொத்தம் 300க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கிறது.  ஒவ்வொன்றுக்கும் 5 ஆண்டுகள் கணக்கில் கொண்டால், இன்னும் 1500 வருடங்களுக்கு விடிவு காலம் என்பது கேள்விக்குறிதான்.  ஒருவேளை ஜல்லிக்கட்டில் கண்ட இளைஞர் எழுச்சியை ஆண்டவன் கட்டளை என்று கொண்டாடத் தயாரானால், அதற்கும் கிட்டத்தட்ட 10 கட்சிகள் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.  தமிழனின் ஒற்றுமையை ஜனவரியில் ஜல்லிக்கட்டிலும், புதிய கட்சிகள் அவற்றை எப்படிக் குதறியது என்பதை செப்டெம்பரிலுமாக வெறும் 8 மாதத்தில் பார்த்திருக்கிறோம்.  இதில் பெரிய தலைவர்கள் இருவர் இறங்கினால் நிலைமை என்ன ஆகும் என்பதைக் கூடவா யோசிக்க முடியாமல் போனது???

       தற்போதைய சூழலில் நல்லவர்கள் அரசியலுக்கு வருவது முக்கியமா அல்லது நல்லது செய்யக் கூடிய, அரசியல் அறிந்த வல்லவர்கள் அரசியலுக்கு வருவது முக்கியமா என்று யோசியுங்கள். சரி, கமலும், இரஜினியும் அரசியலுக்கு வருவதால் என்ன நடக்கும்???  சென்ற தேர்தலில் மிகப் பெரிய ஒரு விஷயம் நிகழ்ந்தது… அது மிக வலுவான ஒரு எதிர்க்கட்சியும், அதையும் விட மிக வலுவான ஒரு ஆளுங்கட்சியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல்முறையாக… ஆனால் அதன் விளைவுகள்??? ஆளுங்கட்சியின் பலம் ஒன்றைக் கொண்டே எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியும் என்ற காரணத்தால், எதிர்க்கட்சி எவ்வளவு பலம் வாய்ந்ததாக இருப்பினும், ஏதும் செய்ய முடியாமல் போனது.  காரணம், அரசியல் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளக் கூட விரும்பாத மக்கள்.

       திமுகவின் நிரந்தர வாக்காளர் சதவீதம் 30%. அதிமுகவுக்கு 32.5%. போன தேர்தலில், வாக்களித்தவர்கள் 66.5 சதவீதம்.  அதாவது 4 சதவீதம் மக்களே வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கப் போயிருக்கின்றனர்.  தற்போது இரஜினியும், கமலும் (விஜய் கூட களத்தில் இறங்கும் ஆலோசனையில் இருப்பதாகக் கேள்வி) கட்சி ஆரம்பித்தால் என்ன ஆகும்.  ஓட்டுக்கள் பிரியும்.  தற்போது இருக்கும் நீட், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு உங்களுக்கு பிடித்தமானவர்கள் ஆதரவளிக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியாமல் உங்களின் ஆதரவைத் தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்??? ஜக்கி வாசுதேவின் பயணத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவ்வளவு பேசியும், அதற்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் இரஜினி. கேட்டால் நதிநீர் இணைப்பு நல்லது என்பீர்கள்… ஜக்கி ஆதரவாளர்களைக் கேட்டாலே சொல்வார்கள், ஜக்கி வாசுதேவ் அவர்களின் பயணம் நதிகளைக் காப்பாற்ற வேண்டித்தான் இணைக்க அல்ல என்று…

       இரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவது தவறென்று சொல்கிறேன் என்பதல்ல, மாநில சுயாட்சி உரிமைகள் பற்றியும், மத்திய அரசின் திட்டங்களைப் பற்றியும், அது குறித்து அவர்களின் நிலைப்பாடு என்பதையும், அப்படியே இப்படித் தூக்க அப்படிப் போட்ருவேன் போன்ற டயலாக் இல்லாமல் உண்மையிலேயே ஊழலை ஒழிக்க, இருக்கும் பிரச்சினைகளைச் சீர் செய்ய என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பகிரங்கமாக அறிவித்துவிட்டு வரட்டும் என்றுதான் சொல்கிறேன்.  இரசிகர் மன்றப் பிரதிநிதிகளை அரசியலில் இறக்கவிட்டு, தலைவா, ஆண்டவரே போன்ற வார்த்தைகளை மட்டும் காதில் வாங்காமல், மக்களின் அழுகுரலும் சற்றுக் கேட்டுவிட்டு வரட்டும் என்றுதான் சொல்கிறேன்.  இவ்வளவு ஏன் இருவரில் ஒருவர் – ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு, GDP பற்றியும், அவர்களின் நிலைப்பாட்டையும் தெளிவாக நாளைக் காலை வெளியிட்டால், அவர்களுடைய கட்சிக்கு முதல் தொண்டனாய் அடுத்த ஒரு மணி நேரத்தில் என்னை நானே பகிரங்கமாய் இணைத்துக் கொள்கிறேன். 

       நன்றி!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top