இதுக்குப் பேசாம ஆட்சியைக் கலைச்சிருக்கலாம் முதல்வரே…
  • 10:02AM Sep 19,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 10:02AM Sep 19,2017 Chennai, Tamil Nadu 600003, India

டி.டி.வி. தினகரன் தரப்பிலிருக்கும் 18 எம்எல்ஏக்களை திடீரென்று தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால்.  அதோடு நில்லாமல், அந்தத் தொகுதிகளைக் காலித் தொகுதிகளாகவும் அறிவித்துள்ளார்.  மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது இது சரியான, தைரியமான நடவடிக்கை போலத் தோன்றினாலும் – உண்மையில் இது ஒரு குழப்பமான முடிவு.  புத்திசாலித்தனம் போலத் தோற்றமளிக்கும் முடிவு என்று கூடக் கூறலாம்.  அதனாலேயே இந்தக் கட்டுரை “இதுக்குப் பேசாமல் ஆட்சியைக் கலைச்சிருக்கலாம் முதல்வரே…”

ஏன் அப்படி??? விரிவாகப் பார்ப்போம்… தமிழகத்தின் மொத்த சட்டமன்றத் தொகுதிகள் 234.  ஒரு ஆட்சி அமையத் தேவையான பலம் குறைந்தபட்சம் 117.  ஆளும் தரப்பு வெகு புத்திசாலித்தனமாகச் செயல்படுவதாக எண்ணிக் கொண்டு 19 காலி இடங்களைத் தாங்களாகவே உருவாக்கி விட்டனர்.  அதாவது அவர்களின் பலமான 136 ல், தற்போது 18, ஏற்கெனவே ஒரு தொகுதி (ஆர்.கே.நகர்) என மொத்தம் 19 எம்எல்ஏக்களை தாரை வார்த்துக் கொடுத்து விட்டனர்.  நீட் முதலிய விவகாரங்களிலும், பாஜக மீதான பரிவின் காரணமாகவும், ஆளும்கட்சித் தரப்பு பொதுமக்களின் கடுமையான அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிற சூழ்நிலையில், 136-ல் 19 ஐ நீக்கி, தங்களுடைய பலத்தை சரியாக 117 ல் நிறுத்தியிருப்பது எவருடைய யோசனையோ என்பது புரியவில்லை. ஒருவேளை தினகரன் கூறுவது போல ஸ்லீப்பர் செல்கள் ஒருவர் கவிழ்ந்தாலும் கூட, ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்த. சட்டப்படி எந்தத் தடையும் இருக்காது. 

சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 21 பேரை நீக்கும் முடிவும், தங்களுடைய நீக்கப்பட்ட ஆட்களின் எண்ணிக்கையை விட, அதிகமான ஆட்களைத் தகுதி நீக்கம் செய்து விட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பி விடலாம் என்ற தவறான நினைப்பின் விளைவே… நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்குக் கட்டாயம் உண்டு… ஆனால், அதற்கும் மேல் சபாநாயகருக்கு ஒரு முக்கியப் பொறுப்பு உள்ளது.  அது சட்டசபை உறுப்பினர்கள் அனைவரையும் சமமாக, கட்சி பேதமின்றி நடத்துவது.  நாளை இது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், போதிய காரணங்களின்றி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் சபாநாயகர் தனபால், அவர் பதவிக்கு அவரே வேட்டு வைத்தது போலாகிவிடும்.  தகுதி நீக்கம் செய்யாத பட்சத்தில், 21 எம்எல்ஏக்களும் என்று சட்டசபையைக் கூட்டினாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார்கள்.  தப்பிக்க இயலாது. 

மேலும், ஒருவேளை நேரடியாக இவர்களே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டு கலைத்திருந்தால், ஒருவேளை மக்கள் இவர்களை ஆதரித்திருக்கலாம்.  ஓபிஎஸ் அவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் அந்தச் செல்வாக்கு மக்களிடத்தில் இருக்கவும் செய்தது.  மேலும், புதிதாகப் பிள்ளையார் சுழி போடப்பட்ட கட்சிகள் ஓட்டுக்களைப் பிரித்திருப்பார்கள்.  ஆனால், தற்போதைய நிலைமை, மக்கள் நீட், உதய், GST போன்றவற்றைத் தடை செய்யவாவது திமுகவுக்கு வாக்களித்தாக வேண்டும் என்ற நிலையை இவர்களே உருவாக்கியும் விட்டனர். இப்போது ஆட்சியைக் காப்பாற்றினாலும், 117 என்பது மிகவும் அபாயமான எண்.  திமுக 19 ல் ஒருவேளை ஜெயித்து விட்டால், கண்டிப்பாகச் சரிக்கு சரியான ஒரு எதிர்க்கட்சியை வைத்துக் கொண்டு, இஷ்டப்படி மத்திய அரசு சொன்னதையெல்லாம் செய்து கொண்டிருக்க முடியாது (காரணம் மெஜாரிட்டி ஒப்புதல் கிடைக்காது.).  அவர்கள் கோபத்திற்கும் ஆளாக நேரும்.

எப்படிப் பார்த்தாலும், அதிகபட்சம் சில மாதங்கள்தான் என்ன செய்தாலும் தாக்குப் பிடிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியதோடு, என்ன காரணத்திற்காக மத்திய அரசின் திட்டங்களை ஆதரிக்கிறார்களோ, அதே திட்டங்களின் மூலம் அவர்களின் கோபத்திற்கும் ஆளாகத் தயாராகி வருகிறார்கள்.  இப்படிச் சுற்றி ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்பது எப்படிச் சரியென்றும் தோன்றவில்லை… அதனால்தான் சொல்கிறேன் – இதுக்குப் பேசாமல் ஆட்சியைக் கலைச்சிருக்கலாம் முதல்வரே…

 

    

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top