#Bhagavad Gita: கீதையை உபதேசித்தப் பிறகும் அர்ஜுனனுக்கு ஏற்பட்ட சந்தேகம் என்ன தெரியுமா?
  • 11:46AM Dec 03,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:46AM Dec 03,2019 Kodambakkam

இந்து மதத்தில் பகவத்கீதை மகத்துவம் பெற்ற புனித நூலாக இருந்து வருகிறது. மகாபாரத போரில் பஞ்ச பாண்டவர்களின் சேனையை வழிநடத்திச் சென்ற அர்ஜுனனுக்கு, “இப்படி எண்ணற்ற உயிர்களை எதற்காக கொன்று குவிக்க வேண்டும்?” “கோபம், குரோதம், பகை, பழிவாங்கும் குணம் இவைகளை மறந்து பாவத்தைச் செய்தவர்களை மன்னிக்கக் கூடாதா?” என்று பல சந்தேகங்கள் வருகிறது. அப்போது அர்ஜுனனின் சந்தேகங்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கங்களைக் கூறுகின்றார் அவர் கூறிய விளக்கங்களை தான் கீதை என்ற புனித நூலாக இந்து மதம் போற்றி வணங்கி வருகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் சந்தேகங்களைத் தீர்த்த பிறகும் ஒரு புதிய சந்தேகத்தை எழுப்பினான்.

2c.jpg

அர்ஜுனனின் அந்த புதிய சந்தேகம் என்ன தெரியுமா? ஸ்ரீ கிருஷ்ணர் மனித குலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவத்தை அல்லவா கூறியிருக்கின்றார். அதில் நுட்பமான பல அரிய உண்மைகளையும் எடுத்துச் சொல்லி இருக்கின்றார். இதை சொல்ல கிருஷ்ணர் நம்மை எதற்காகத் தேர்ந்தெடுத்தார்? இது தான் அர்ஜுனனுக்கு ஏற்பட்ட சந்தேகம். பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாமே. ஏன்? அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? அவரை ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார்? அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல மிகச் சிறந்த பக்திமானும் கூட. இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ள, உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்யும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைச் சொல்ல ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் நேரடியாகக் கேட்டார். அதற்கு அவர் கூறிய பதில் இது தான்.

2d.jpg

அர்ஜுனா! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு இத்தனை நாள் கீதையைச் சொல்லவில்லை. நீ நினைப்பது போல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்தும் உணர்ந்த ஒரு மனிதராக என்னால் கருத முடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது. கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும் போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான் ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக் கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை, அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் ஏராளம்.

2e.jpg

அர்ஜுனா! நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும் கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அது தான் உன் தனிச்சிறப்பு. களத்திலே நின்ற போதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது? இந்த யுத்தம் தேவைதானா? என்றெல்லாம் நீ யோசித்தாய். அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்த போதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள் என்றார் ஸ்ரீ கிருஷ்ணர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top